வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் ஆற்றங்கரையோரம் உள்ள கெங்கையம்மன் கோயில் திருவிழா மாவட்டத்தில் பிரபலமானது. வேலூர் மட்டும்மல்லாமல் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஆந்திரா சித்தூர், குப்பம் பகுதியில் இருந்தும் மக்கள் இந்த விழாவை காண வருவார்கள்.
கெங்கையம்மன் கோயிலில் இருந்து அம்மனின் சிரசு (தலைப்பாகம் மட்டும்) ஊர்வலம் வரும். அதன்பின்னால் 5 முதல் 7 குடைகள் அடங்கிய ஊர்வலம் வரும். சிரசை வணங்க லட்சக்கணக்கான மக்கள் கூடுவதால் மாவட்ட நிர்வாகம் இந்த திருவிழாவின்போது உள்ளுர் விடுமுறை விடுவது வழக்கம்.
அதன்படி கெங்கையம்மன் சிரசு விழா, மே 15 ந்தேதி காலை தொடங்கியது. லட்சத்துக்கும் அதிகமான மக்கள் காலையிலேயே குடியாத்தம் நகரத்தின் முக்கிய வீதிகளில் திரண்டு நிற்க சிரசு ஊர்வலம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த விழாவுக்காக மே 15 ந்தேதியை உள்ளுர் விடுமுறையாக மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவித்தார். இதனால் மாநில அரசு அலுலகங்கள் மூடப்பட்டுவிட்டன. இதனால் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரண்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த விழாவுக்காக சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளர்.
அதேபோல், ஆம்பூர் அடுத்த கன்னடிகுப்பத்தில் கோயில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் தேர் இழுக்கும்போது அதே பகுதியை சேர்ந்த வினோத் மற்றும் பீமாராவ் என்கிற இருவருக்கு இடையே மோதலாகியுள்ளது. இந்த மோதலில் இருவரும் அடித்துக்கொள்ள ஒருக்கட்டத்தில் பீமாராவ், தன்னிடம்மிருந்த கத்தியை எடுத்து வினோத்தின் வயிற்றில் குத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.
வினோத் கத்திக்குத்து வாங்கி அலற விழா நிறுத்தப்பட்டு உடனே வினோத்தை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த பகுதி பதட்டமாக போலிஸார் குவிக்கப்பட்டு வேகவேமாக விழா நடத்தப்பட்டுவருகிறது.