அண்மையாகவே பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் மோதல் போக்கு தொடர்பான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரு மாணவர்கள் பிளேடால் தாக்கி மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வேலூர் அடுத்துள்ள சதுப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் திலீப்குமார். ஊசூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் உடன்படிக்கும் மற்றோரு மாணவனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பே இரு மாணவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்து ஆசிரியர்கள் இருவரையும் கூப்பிட்டு கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மதிய உணவு இடைவேளை நேரத்தில் மீண்டும் இருமாணவர்களுக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது. அப்பொழுது திலீப்குமாரை சக மாணவர் பிளேடால் வெட்டியுள்ளார். இதில் தலை, முதுகு, மார்பு ஆகிய பகுதிகளில் மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ஊசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலில் சிகிச்சை அளிக்கப்பட்டு தலையில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்காக திலீப்குமார் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.