போலீசுக்குப் பயந்து தசரா வேடமணிந்து
சுற்றிய ஆயுள் தண்டனைக் கைதி சிக்கினார்
ஆயுள் தண்டனையடைந்து ஜாமீனில் வெளியே வந்த கைதி போலீசாருக்குப் பயந்து சாமியார் வேடத்தில் சுற்றி வந்தவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை டவுண் பகுதி பாரதியார் தெருவைச் சேர்ந்த செல்லப்பா என்பவர் கடந்த 2008ம் ஆண்டு முன் பகை காரணமாகச் சிலரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய பிடிபட்ட மூன்று குற்றவாளிகளில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகில் உள்ள கோவில் பத்து கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியனும் ஒருவர். இதில் சுப்பிரமணியன் உள்ளிட்ட மூவர் மீது கொலைக் குற்றம் நிரூபணம் ஆனதால் அவர்களுக்கு 2015ன் போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சுப்பிரமணியன் ஆஜராகாமல் போலீசாருக்குப் பயந்து சாமியார் வேடத்தில் ஊர் ஊராகச் சுற்றி வந்தார். தற்போது தசரா திருவிழா எனப்படும் நவராத்திரி திருவிழா திருச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரன்பட்டினம் நகரின் முத்தாரம்மன் ஆலயத்தில் ஒன்பது நாள் தசரா திருவிழா கோலகலாமாக நடந்து வருகிறது. புகழ்பெற்ற குலசேகரன்பட்டினத் தசரா விழாவிற்காக ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தங்களுக்குப் பிடித்தமான பத்ரகாளி, கணேசர், முருகன், அனுமன் உள்ளிட்ட பலவேறு தெய்வங்களின் வேடமிட்டும், சாமியார் போலீஸ் போன்று வேடமணிந்தும் தங்களின் தெய்வ நேர்ச்சையை செலுத்தி வருகின்றனர்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சுப்பிரமணியன் சாமியார் வேடமணிந்து திருசெந்தூர் ஆலயம் முன்பாகச் சுற்றி வருகிற தகவல் போலீசாருக்கு கிடைக்க, அந்தப் பகுதியில் அவரைக் கண்காணித்த தனிப்படையினர் சுப்பிரமணியனைக் கைது செய்தனர். பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார். தெய்வம் நின்று தண்டனை கொடுத்து விட்டது.
செய்தி : ப.இராம்குமார்