திருச்சி காந்திபுரம் தேவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சலாம். இவரது மனைவி கைருன்னிஷா. இவர்களுக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஒரு ஆண் குழந்தை 5-வதாகப் பிறந்துள்ளது. கூலித்தொழிலாளியான அப்துல் சலாம் சரிவர எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்கள் உறவினர்களிடம் கடனாகப் பணத்தைப் பெற்று சூதாடி வந்துள்ளார்.
அந்த வகையில் ஆரோக்கியராஜ் என்பவரிடம் 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதனை ஈடுகட்ட ஆரோக்கியராஜ் தன்னுடைய உறவினர் ஒருவருக்கு குழந்தை இல்லாததால் தற்போது புதிதாகப் பிறந்த குழந்தையைத் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து, அப்துல் சலாம் கைருன்னிஷாவிடம் பேசி, மனதை மாற்றி கடந்த 2 மாதத்திற்கு முன்பு பிறந்த ஆண் குழந்தையை ஆரோக்கியராஜிடம் கொடுத்து பணத்தையும் பெற்றுள்ளார்.
தற்போது திடீரென கைருன்னிஷா தன்னுடைய குழந்தையை மீண்டும் திருப்பித் தர வேண்டும் என்று அப்துல் சலாமிடம் கேட்க அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவர் உறையூர் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பெற்ற மகனை 80 ஆயிரத்திற்கு விற்ற தந்தை அப்துல் சலாம், ஆரோக்கியராஜ் மற்றும் அவருடைய உறவினரான பொன்னர் மற்றும் சந்தான மூர்த்தி ஆகியோரைக் கைது செய்து மணப்பாறை கிளைச்சிறையில் அடைத்தனர்.