தாயின் துணையுடன் தந்தையை கொன்ற மகன்,
மனைவியின் துணையுடன் தாயை கொன்றான்!
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள ஈசன் ஓடை பகுதியை சேர்ந்தவர் விவசாயி வேலாயுதத்தின் மகன் ஆறுமுகம். இவரது தாய் ராணியம்மாள் (65) சொத்து தகராறு காரணமாக மகனை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இவர் கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து காட்பாடி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் ராணியம்மாளின் மகள் ஆனந்தி காட்பாடி காவல்நிலையத்தில் தனது தாய் ஒருவார காலமாக காணவில்லை என்று கடந்த 2 ஆம் தேதி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காட்பாடி ஆய்வாளர் பழனி விசாரணை செய்ததில் தாயை ஆறுமுகமே கொன்று புதைத்துள்ளது தெரியவந்தது.
சொத்து தகராறில் ராணியம்மாளை மகன் ஆறுமுகம் மற்றும் ஆறுமுகத்தின் மனைவி பிரியா ஆகியோர் சேர்ந்து தலையனை வைத்து அழுத்தி புதைத்து கொலை செய்துவிட்டு பிரேதத்தை எரிக்க முயன்றுள்ளனர். முழுவதும் எரியாத நிலையில் ராணியம்மாளின் உடலை தலை மற்றும் உடல் பகுதிகளை துண்டு துண்டாக வெட்டி அவரது நிலத்திலேயே புதைத்துள்ளனர்.
இதுகுறித்து காட்பாடி காவல்துறையினர் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி பிரியாவை கைது செய்து சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று புதைத்த இடத்தை அடையாளம் காட்டி பிணத்தை ஜே சி பி இயந்திரம் மூலம் தோண்டி எடுத்து வட்டாச்சியர் ஜெகன், காவல் ஆய்வாளர் பழனி, ஆகியோர் மருத்துவ குழுவினர் முன்னிலையில் பிணத்தை ஆய்வு செய்தனர்.
இதே ஆறுமுகம் தான் அவரது தந்தை வேலாயுதத்தை சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு தாய் ராணியம்மாளுடன் சேர்ந்து தலையில் கட்டுக்கல் போட்டு கொலை செய்தார். அப்போது இதே போல் நாமும் பெற்ற மகனால் கொலை செய்யப்படுவோம் என்பதை தாய் ராணியம்மாள் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். அந்த வழக்கும் நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் அவரது தாயை கொலை செய்துள்ள சம்பவம் காட்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாயை கொன்று புதைத்த இடத்தை அடையாளம் காட்டிய ஆறுமுகம் எந்த வித சலனமுமின்றி தோண்டி எடுக்கப்பட்ட அழுகிய நிலையில் கிடந்த தாயின் உடல் பகுதிகளை தன கைகளாலேயே எடுத்து போலிசாரிடம் காண்பித்தார்.
- ராஜா