நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையத்தில் 17 வயது நிரம்பிய சிறுமிக்குப் பிறந்த குழந்தையை, தந்தையே இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். குமாரப்பாளையம், வட்டமலை குள்ளங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் 2019ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்திருக்கிறார். கடந்த ஆண்டு அந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அவர்கள் இருவரும் அந்தக் குழந்தையை ஐந்து மாதங்களாக வளர்த்து வந்த நிலையில், வறுமையில் வாடி இருக்கின்றனர். அப்போது சண்முகத்தின் சகோதரர் கார்த்திக், அந்தப் பெண்ணின் தாயார் மகேஸ்வரி, பெண்ணின் அக்கா கணவர் சின்ராஜ் ஆகியோர் குழந்தையை விற்பதற்கு யோசனை கூறியுள்ளனர். அதன்படி திருப்பூரில் வசிக்கும் நாகராஜ் என்ற இடைத்தரகர் மூலம் 2.50 லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்பனை செய்துள்ளனர்.
இந்நிலையில், சண்முகம் கடந்த ஜனவரி மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சண்முகத்தின் மனைவி, நாமக்கல் மாவட்டம் குழந்தைகள் நல அலுவலரிடம் தனது குழந்தையை மீட்டுத் தரக் கோரி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலர் குமாரப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரை ஏற்று விசாரணை நடத்திய காவல்துறையினர் திருப்பூரிலிருந்து குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர் நாகராஜ், சண்முகத்தின் சகோதரர் கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். மேலும், இதற்கு உடந்தையாக பெண்ணின் தாயார் மகேஸ்வரி, பெண்ணின் அக்கா கணவர் சின்ராஜ் ஆகியோர் ஏற்கனவே சிறையில் இருக்கிற நிலையில், இந்த வழக்கிலும் கைதாகியுள்ளனர். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட தலைமறைவான மேலும் நான்கு பேரை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.