சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள நல்லூர் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற சென்னையைச் சேர்ந்த தந்தை, மகள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த ஒரு வாரமாக கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சென்னை மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் பாலமுரளி அவருடைய குடும்பத்தினருடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சேலம் ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்துள்ளார். இன்று மதியம் குடும்பத்துடன் ஏற்காட்டிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நல்லூர் நீர்வீழ்ச்சி பகுதியில் குளித்துக் கொண்டு இருந்தனர்.
குளித்துவிட்டு பாலமுரளி மற்றும் அவரது மகள் சௌமியா ஆகிய இருவரும் வெளியேறும் பொழுது சௌமியா கால் இடறி தண்ணீருக்குள் விழுந்துள்ளார். உடனடியாக தந்தை பாலமுரளி மகளைக் காப்பாற்ற முயன்ற நிலையில் அவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். உடனடியாக ஏற்காடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் தீயணைப்புத் துறையினருடன் வந்த போலீசார் இரண்டு பேரின் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஏற்பாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இனி நல்லூர் நீர்வீழ்ச்சி பகுதியில் யாரும் குளிக்கக் கூடாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.