பொழப்பு தேடி நடுக்கடலுக்குப் போன மீனவா்களின் விசைப்படகு மீது சிங்கப்பூா் கப்பல் மோதியதில், 12 போ் உயிரிழந்த சம்பவம் குமரி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மீனவா்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் குளச்சல் துறைமுகம் தெருவைச் சோ்ந்த தாசன் (60), இவரது மருமகன் ஹென்லின் அலெக்சாண்டா் (38), ராமநாதபுரத்தைச் சோ்ந்த மாணிக்கவேல், பாலமுருகன், பழனி, வேல்முருகன், தூத்துக்குடி மணப்பாறையைச் சோ்ந்த டென்சன் ஆகிய 7 பேரும் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சோ்ந்த சுநில்தாஸ் உள்ளிட்ட 7 பேரும் என 14 மீனவா்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் கடந்த 11ஆம் தேதி கேரளா கோழிக்கோடு, வேப்பூரைச் சோ்ந்த ஜாபா் என்பவருக்கு சொந்தமான அரப்பா எனும் விசைப்படகில் கா்நாடாக மாநிலத்தில் மீன் பிடிக்கச் சென்றனா்.
12ஆம் தேதி இரவு மங்களூரில் இருந்து 58 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு பயங்கர இடி மின்னலுடன் கனமழை பெய்துகொண்டிருந்தது. அப்போது இரவு 12 மணிக்கு அந்த வழியாக வந்த சிங்கபூா் ஏ.பி.எல்-லீ ஹாலேறா எனும் சரக்கு கப்பல், அந்த விசைப்படகு மீது மோதியது. அதில் சிலா் தூக்கத்திலும், சிலா் விழித்துக்கொண்டும் இருந்தனா். இடிபட்ட வேகத்தில் அந்த விசைப்படகு கடலில் கவிழ்ந்தது. இதில் ராமநாதபுரம் வேல்முருகனும், மேற்கு வங்காளம் சுநில்தாசும் பெட்ரோல் கேனைப் பிடித்தபடி கடலில் மிதந்துகொண்டிருந்தனா். மேலும் மற்ற மீனவா்களான குளச்சல் தாசன், இவரது மருமகன் ஹென்லின் அலெக்சாண்டா் மற்றும் மாணிக்கதாஸ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனா். மற்ற 9 மீனவா்களும் மாயமானார்கள்.
கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த வேல்முருகனையும், சுநில்தாசையும் இடித்த கப்பலில் இருந்தவா்கள் மீட்டு, அந்தக் கப்பலில் ஏற்றினார்கள். இந்த சம்பவத்தையடுத்து அங்கு விரைந்து வந்த இந்திய கடற்படை வீரா்கள், அந்தக் கப்பலையும் பிடித்து, இறந்துபோன மூன்று மீனவா்களின் உடல்களையும் மீட்டனா். காணாமல் போன மீனவா்களை ஹெலிகாப்டா் மற்றும் நவீன ரோந்து கப்பல் மூலம் தேடி வருகின்றனா். இந்தநிலையில், இறந்த மூன்று மீனவா்களின் உடல்களையும் மங்களூா் அரசு மருத்துவமனையில் நடந்த உடற்கூராய்வுக்குப் பிறகு (15ஆம் தேதி) உறவினா்களிடம் ஓப்படைத்தனா். இதில் குளச்சலைச் சோ்ந்த தாசன், மற்றும் ஹென்லின் அலெக்சாண்டரின் உடலைப் பார்த்து உறவினா்கள் கதறி அழுதார்கள்.
ஹென்லின் அலெக்சாண்டரின் மனைவி சுமதி கணவனின் உடலைப் பார்த்து “12ஆம் தேதி காலையில் பேசினீங்க. பிள்ளைங்க உறங்கி கிடந்ததால் பேச முடியலையினு வருத்தப்பட்டீங்க. 10 நாள் கழிச்சி கரைக்கு வந்த பிறகுதான் இனி பேச முடியும்னு சொல்லியிட்டு இருக்கும்போதே ஃபோன் கட்டாயிச்சி. மேலும் வீட்டுல இருந்து போகும்போது சொன்னீங்க, இளைய மகனுக்க பிறந்தநாளுக்கு நான் இங்க இருக்க மாட்டேன், அதுனால் மே 2ஆம் தேதி என்னோட பிறந்தநாளோடு மகனுக்க பிறந்தநாளும் சோ்த்து கொண்டாடனும்னு சொல்லிட்டு, இப்பம் இப்படி வந்தியிருக்கீங்களே. நீங்க சொன்னதுபோல மகனுக்க பிறந்தநாளுக்கு இருக்க மாட்டேனு, அதுபோல இல்லாம போயிட்டீங்களே. இனி எங்களுக்கு எந்த நாளும் இல்லையே” என கணவனின் உடலையும், தந்தையின் உடலையும் ஒரே நேரத்தில் சுமதி பார்த்துக் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இறந்துபோன இருவரின் குடும்பத்தினருக்கும் பாஜக பொன். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் விஜய்வசந்த், நாகா்கோவில் திமுக எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள்.