திருவண்ணாமலை நகரம் அருணகிரிபுறம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு ராஜரத்தினம் (30) என்ற ஒரு மகன் உள்ளார். ராஜரத்தினம் கூலி வேலை செய்து வருவதோடு கள்ளச் சந்தையில் மதுபான விற்பனையும் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதே பகுதியைச் சேர்ந்த ராணி என்பவரும் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த இருநபர்களுக்கு இடையே மது விற்பனை தொடர்பாக பல பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தை பொங்கல் தினத்தையொட்டி டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்ததால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கள்ளச் சந்தையில் மதுபானம் வாங்கி அருந்தியுள்ளனர். கள்ளச்சந்தையில் ஆஃப் பாட்டில் ஆல்கஹால் விலை ரூபாய் 500 முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்துள்ளார்கள் என்றும், இதனால் பணம் கொட்டியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதில் ராணியிடம் இருந்த மதுபாட்டில்கள் காலியாகியுள்ளது. இதனால் ஆட்களை அனுப்பி ராஜரத்தினத்திடம் கேட்டுள்ளார். அவர் எனக்கு விற்பனைக்கு வேண்டும் என மதுபாட்டில்களை தரமறுத்துள்ளார். இதனால் இருநபர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு தகராறு முற்றியதால் மதுபோதையில் இருந்த ராணியின் ஆதரவாளர்கள் சிலர் ராஜரத்தினத்தை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ராஜரத்தினம் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் ராஜரத்தினத்தின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசார் உதயா, அரிபிரசாத், அருண்குமார், தரணிதரன், மணி மற்றும் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்கும் ராணி ஆகிய 6 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தற்போது 3 நபர்களை கைது செய்த போலீசார் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கத்தி குத்து தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டு மீதமுள்ள மூன்று நபர்களையும் கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.