திமுக அரசைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி,
''கோவை மாவட்டத்தில் அனைத்துச் சாலைகளும் பழுதடைந்து மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக மழை பெய்த பொழுது அதிகமாக மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பள்ளங்களில் விழுந்து பல பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் முழுமையாக அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை இன்று தாமதப்படுத்திச் செயல்படாமல் கிடக்கின்றது. அந்தத் திட்டங்களை எல்லாம் வேகமாக முடிக்க வேண்டும்.
அதேபோல் மக்களை வாட்டி வதைக்கும் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு போன்ற திமுக அரசின் அனைத்து செயல்களையும் கண்டித்து வருகின்ற இரண்டாம் தேதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் கோவையில் நடைபெற இருக்கிறது.
தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கி வைக்க வர இருக்கிறார். தமிழக முதல்வர் கோவை மாவட்டத்திற்கு இந்த ஒன்றரை வருடமாக எந்த ஒரு திட்டத்தையும் தரவில்லை. அதிமுக கொடுத்த திட்டங்களையும் முடிக்காமல் இருக்கிறார்கள்'' என்றார்.