தேனி மாவட்டம் என்பது கேரளாவை ஒட்டிய மாவட்டம். இங்கு குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு, என கேரளாவை இணைக்கும் மூன்று பிரதான சாலைகள் உள்ளது. போடி, தேவாரம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட கூலி தொழிலாளிகள் தினம் தோறும் கேரளாவிற்கு தோட்ட வேலைக்கு சென்று வருகின்றனர்.
கேரளாவில் விளையக்கூடிய ஏலக்காயை கொண்டுவருவதற்கு முந்தைய காலத்தில் தேவாரம் மேற்கு தொடர்ச்சி பகுதியில் சாக்கலூத்து மெட்டு பாதையை பயன்படுத்தி வந்தனர். பின்னர் இந்த மலைப்பாதையில் சாலைவசதி செய்து தருவதற்காக 1981 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் வனத்துறையினரின் கெடுபிடி காரணமாக சாலை அமைக்கும் பணி தடைபட்டது. இந்த மலைப்பாதை அமைத்து தரவேண்டும் என்பது தேனி மாவட்ட விவசாயிகளின் 39 ஆண்டுகள் கோரிக்கை. கேரளாவை இணைக்கும் 12 கிமீ தொலைவு உள்ள இம்மலைப்பாதையை அமைத்தால் 60 கிமீ வரை பயணச்செலவு குறையும், மேலும் கேரளாவில் விளையும் ஏலக்காய் போன்ற பொருட்களை எளிதில் கொண்டு வந்துவிடலாம்.
இந்த மலைப்பாதை திட்டத்தை விரைவில் துவங்க வேண்டும் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம், 18 ஆம் கால்வாய் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தோர் சாக்கலூத்து மெட்டு மலை பாதை வரை பேரணியாக செல்ல முயன்றபோது. ஊர்வலத்திற்கு அனுமதி தராத காரணத்தினால் காவல் துறையினர் வழிமறித்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். பின்னர் வாகனங்களில் சாக்கலூத்து மெட்டு பாதைக்கு வந்த விவசாய சங்கத்தினரை அங்கிருந்த வனத்துறையினர் அனுமதியுடன் சிறிது தூரம்வரை சென்று திரும்பினர். இது குறித்து விவசாய சங்கத்தினர் கூறுகையில் சாக்லூத்து மெட்டு பாதையை அமைப்போம் என தேர்தல் வாக்குறுதியாக மட்டுமே அரசியல்வாதிகள் கூறுகின்றனர். விரைவில் இத்திட்டத்தை துவங்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாய சங்கத்தினர் கூறினர்.