பெரம்பலூரில் நடைபெற்ற விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகை உள்ளிட்ட பலவற்றை வலியுறித்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இன்று (ஜூலை 31) காலை 11 மணிக்கு தலைமை நிர்வாகி திரு நூ.ஷே.முஹம்மது அஸ்லம் தலைமையில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது.
கரும்பு பெருக்க அலுவலர் வேணுகோபால், துணைத் தலைமை ரசாயணர் மாதவன், துணைத் தலைமைப் பொறியளர் மணிவண்ணன், தொழிலாளர் நல அலுவலர் ஆர்.இராஜாமணி, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் செந்துறை ஞானமூர்த்தி, ராஜாஜெயராமன், ஏ.கே. இராசேந்திரன், நம்மக்குணம் சீனிவாசன், வரதராஜன் , தேவேந்திரன், பி.சி.இராமசாமி, சீகூர் பெருமாள், துங்கபுரம் சக்திவேல் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவை,
- நடப்பு கரும்பு அரவையை 14-12-2020 இல் துவக்கலாம் என முடிவு செய்துள்ள ஆலை நிர்வாகத்தின் முடிவை மாற்றி நவம்பர் 15 ஆம் தேதிவாக்கில் துவங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
- ஆலையையும், இணைமின் திட்டத்தையும் புணரமைக்கும் பணிக்கு தேவையான உதிரிபாகங்களை உடனே வால்சந்த் நகர் நிர்வாகம் உடனே வழங்க வேண்டும்.
- ஆலையில் உள்ள கெஸ்டு ஹவுஸ்சில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கு ஒரு அறை ஒதுக்க வேண்டும்.
- இணைமின் திட்டத்திற்கு பங்குத் தொகை வழங்கியவர்களுக்கு உடனடியாக பங்குப் பத்திரம் வழங்க வேண்டும்.
- 2015-2016, 2016-2017 ஆம் ஆண்டுக்கு மாநில அரசு அறிவித்த (SAP) கூடுதல் விலை டன்னுக்கு ரூ. 450 வீதம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகை ரூ. 33 கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும்.
- விவசாயிகளுக்கு விதைக்கரணை இலவசமாக வழங்க வேண்டும்.
- நடப்பு பருவத்திற்கு வெட்டப்படும் கரும்புக்கு, தாமதம் இல்லாமல் வெட்டிய 15 தினங்களுக்குள் விவசாயிகளுக்கு பணம் வழங்க வேண்டும்.
- இணைமின் திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கப்பட்ட வகையில் வரவேண்டிய தொகை ரூ. 15 கோடியை உடனே பெற வேண்டும். மற்ற ஆலைகளில் இருந்து வரவேண்டிய பாக்கி தொகையை உடனே பெறவேண்டும்.
- கரும்பு வெட்டுவதற்குமுன் சாலைகளைச் சரிசெய்தும், சாலையின் குறுக்கே தொங்கும் நிலையில் உள்ள மின் கம்பிகளை உயர்த்தி கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காலிப் பணியிடங்களுக்கு தற்க்காலிக பணியாளர்கள் நியமிக்கும் போது பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்களை நியமிக்க வேண்டும்.
- வெட்டாள்களை நியமிப்பதும், கூலியை வழங்குவதும் ஆலைநிர்வாகமே கண்காணித்து வழங்க வேண்டும்.
- எரிந்த கரும்புகளை முன்னுரிமை அடிப்படையில் உடனே வெட்டி கழிவு இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.