விழுப்புரம் முதல் நாகை வரை 4 வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காகச் சிதம்பரம் அருகே உள்ள பெரிய பட்டு முதல் சி.முட்லூர் வரை நான்கு வழி சாலைக்காக நிலம், வீடு, வணிக வளாகம் கொடுத்து உரிய இழப்பீடு கிடைக்காமல் அல்லாடும் அனைத்து கிராம மக்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கொட்டும் மழையில் வெள்ளிக்கிழமையன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கலந்து கொண்டவர்களைச் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் மூசா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ்பாபு, ராமச்சந்திரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜா, வாஞ்சிநாதன், முத்து, ஜெயசித்ரா, விஜய், விவசாயிகள் சங்க மாவட்டத்துணை தலைவர் கற்பனைச்செல்வம், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் கொளஞ்சி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்குபெற்றனர். இந்தக் கூட்டத்தில் கோட்டாட்சியர் சரியான பதில் அளிக்காததால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் கோட்டாட்சியரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் அதிமுகவினர் விவசாயிகள் சங்கம் நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள், வருவாய்த்துறையினர், கலந்துகொள்ளும் வகையில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் . அதுவரை வீடுகள் இடிக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் எனச் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
அதனை ஏற்றக் கோட்டாட்சியர் தேதி அறிவிக்காமல் வாய்மொழியாகக் கூட்டம் நடைபெறும் என்று கூறினர். இதனைத்தொடர்ந்து விவசாயிகள் சங்கத்தினர் இதுகுறித்து தேதியை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்றனர். இதற்கு அவர் மாவட்ட ஆட்சியரை கேட்டுதான் கடிதம் கொடுக்க முடியும் என்றதால் பேச்சுவார்த்தையைப் புறகனித்து மீண்டும் கோட்டாட்சியர் அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதே இடத்தில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தையும் நடத்தினர். சரியான முடிவு இல்லை என்றால் இரவு, பகல் பாராமல் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சிதம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த காட்டுமன்னார்கோவில் சட்ட மன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் போராட்டகளத்திற்கு வந்து போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகளை கூறி இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் பேசுவதாகக் கூறினார். இதனால் இந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.