கடலூர் மாவட்டத்தில் நடப்பு குறுவை சாகுபடிக்கான அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மாவட்டம் முழுவதும் 100- க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படுகின்றன. அதேசமயம் புதிதாக 30- க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதன்படி, கடலூர் மாவட்டம், விருத்தாசலம், பூதாமூர் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்று அறிவித்ததால் பூதாமூர், ஏனாதிமேடு, பூந்தோட்டம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்மணிகளை குவியல் குவியலாகக் குவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், கடந்த 30 நாட்களுக்கு மேலாக, காத்துக்கிடக்கும் விவசாயிகளின் நெல்மணிகள் மழையால் நனைந்து, சுமார் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் மறுமுளைப்பு ஏற்பட்டுவிட்டதால், நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளிடம் திறக்கக் கோரி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தும் அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்த உழைப்பு பாழாவதால் ஆத்திரமடைந்த 50- க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்து விருத்தாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்- கடலூர் பிரதான சாலையில் விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் சாலையின் இரு பக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும் என்று கூறியதால் சாலை மறியலை கைவிட்டு, தங்களது கோரிக்கைகளை சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனுவாக எழுதி கொடுத்தனர். மேலும் பூதாமூர் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காவிட்டால் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.