சேலத்தில் நேற்று (ஜூன் 22, 2018) நடந்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தின்போது, எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்காக விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். அதன்படி, ஆட்சியர் ரோகிணி தலைமையில் அதிகாரிகள் நேற்று நடந்த கூட்டத்தில் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
அப்போது கூட்டத்தில் இருந்த விவசாயிகளில் ஒரு பிரிவினர், எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டனர். அப்போது ஆட்சியர் ரோகிணி குறுக்கிட்டு, கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு மட்டுமின்றி அதில் உள்ள மரங்கள், பண்ணைகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று கூறினார்.
அதை ஏற்க மறுத்த விவசாயிகள், ''ஏற்கனவே நான்கு வழிச்சாலைக்காக வழங்கப்பட வேண்டிய இழப்பீடு தொகையே இன்னும் முழுவதும் வழங்கப்படவில்லை. எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும் இனி எங்கள் நிலத்தை கொடுக்கப் போவதில்லை,'' என்றனர்.
இதையடுத்து, சில விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாகக் கூறிவிட்டு, கூட்டரங்கில் இருந்து வெளியேறினர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்புகள் ஏற்பட்டது. விவசாயிகள் சிலர் வெளியேறியதால் ஆட்சியர் ரோகிணி அதிருப்தி அடைந்தார்.
வெளிநடப்பு செய்த சேலத்தை அடுத்த நிலவாரப்பட்டியைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் கூறுகையில், ''எட்டு வழிச்சாலைக்காக விளை நிலத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே, நிலத்தைப் பிடுங்கிக்கொண்டு அகதிகளாக்கி தவிக்க விடுவது நியாயமா?
ஏற்கனவே நான்கு வழிச்சாலைக்கு உரிய இழப்பீடு தொகையை இன்னும் பலருக்கு வழங்காமல் உள்ளனர். இந்த நிலையில், இப்போது கையகப்படுத்தும் நிலத்திற்கு எப்படி இழப்பீடு கொடுக்கப் போகிறார்கள்? அரசாங்கம் கொடுக்கும் சொற்ப இழப்பீடு தொகையை வைத்துக்கொண்டு எந்த விவசாயியின் வாழ்க்கையையும் சீரமைத்து விட முடியாது,'' என்றார்.
அவரிடம், ''எட்டு வழிச்சாலைக்கு ஒரு சதவீதம் விவசாயிகள்கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கலெக்டர் கூறுகிறாரே?'' என்று கேட்டதற்கு,
''நிலம் அளவீட்டுக்காக அதிகாரிகள் செல்லும் இடங்களில் எல்லாம் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எந்த விவசாயியுமே மனம் உவந்து நிலத்தைக் கொடுக்க முன்வரவில்லை என்பதுதான் உண்மை. நிலம் எங்களுடைய சொத்து. அதை எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும் யாருக்கும் எதற்கும் கொடுக்க முடியாது.
ஏற்கனவே நான்கு வழிச்சாலை, ரயில் வழிப்பாதைக்காக விளை நிலங்களைக் கொடுத்துவிட்டோம். இனி எதற்காகவும் நிலத்தைக் கொடுக்க மாட்டோம்,'' என்றார் செல்வராஜ்.