தமிழ்நாட்டில் பவர்கிரீட் என்ற நிறுவனம்13 மாவட்டங்கள் வழியாக உயர்மின் கோபுரங்களை அமைத்து மின்சாரம் கொண்டு செல்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் விவசாய விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்களை அமைக்க கூடாது என பாதிக்கப்படும் விவசாயிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் 13 மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இன்று சாலைமறியல் போராட்டம் நடந்தது. இதையொட்டி பெருந்துறை துணை போலீஸ் சூப்பரிண்டன்ட் ராஜாகுமார் தலைமையில் அறச்சலூர், கொடுமுடி, மலையம்பாளையம், பங்களாபுதூர், கடத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் சென்னிமலையில் குவிக்கப்பட்டிருந்தனர்.
மதியம் 12 மணியளவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பொன்னுசாமி தலைமையில் விவசாயிகள் திரண்டு வந்து பஸ் நிலையம் முன்பு ரோட்டில் நின்று கொண்டு விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள். சாலை மறியல் செய்ய ரோட்டில் அமர்ந்தனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதில், தற்சார்பு விவசாயிகள் சங்க அமைப்பாளர் கி.வே.பொன்னையன், ஏ.ஐ.டி.யு.சியின் மாநில பொது செயலாளர் எஸ்.சின்னுசாமி மற்றும் சா.மெய்யப்பன், செல்வம் (தி.மு.க), முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். 13 பெண்கள் உட்பட 74 பேரை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றி ஒரு திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
அதே போல் நேற்று காலை பவானியில் அந்தியூர் பிரிவில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது ஒருங்கிணைப்பாளர் கே.எம் முனுசாமி போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி, கொ.ம.தே.க கட்சியை சேர்ந்த பிரமுகர்களும் கலந்துகொண்டனர். பவானி அந்தியூர் பிரிவில் 86 க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பவானி போலீசார் அவர்களை கைது செய்தனர்.
மொடக்குறிச்சி பகுதியிலும் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கலந்து கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான வடிவேலு மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் விவசாயிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்கள் "பறிக்காதே பறிக்காதே நில உரிமையை பறிக்காதே" என்று கோஷமிட்டனர். இதையடுத்து மொடக்குறிச்சி போலீசார் அவர்களை கைது செய்தனர் ஈரோடு மாவட்டம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.