கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் மாவட்டங்களிலிருந்து, பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல், கம்பு, நிலக்கடலை, எள் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தற்போது நிலக்கடலை அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் விற்பனைக்காக நிலக்கடலை மூட்டைகளை கொண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
அவ்வாறு கொண்டு வரப்படும் நிலக்கடலை மூட்டைகளுக்கு, உள்ளூர் வியாபாரிகள் மிகவும் குறைந்த விலையை நிர்ணயம் செய்வதால், ஆத்திரமடைந்த விவசாயிகள், வியாபாரிகளைக் கண்டித்து ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கடந்த சில நாட்களாக ஒரு மூட்டை நிலக்கடலையின் விலை 7000 முதல் 8000 ரூபாய் வரை நிர்ணயம் செய்து எடுத்துக் கொண்டிருந்த வியாபாரிகள் இன்று அனைத்து விவசாயிகளின் நிலக்கடலை மூட்டைகளையும், முந்தைய நாட்களின் விலையை விட, 1,000 ரூபாய் குறைத்து 6,000 ரூபாய்க்கு நிர்ணயம் செய்ததாக குற்றம் சாற்றினர். விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பி சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மேலும் உரத்தட்டுப்பாடு பிரச்சனை, மின்சார பிரச்சனை என அனைத்து இன்னல்களையும் கடந்து, ஏர் உழுதல், ஆட்கள் கூலி, வாகன வாடகை என ஏக்கருக்கு 25,000 ரூபாய்க்கு மேல் செலவு செய்து, விற்பனைக்காக ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்திற்கு கொண்டு வந்தால் உள்ளூர் வியாபாரிகள், விவசாயிகளின் கஷ்டத்தை புரிந்து கொள்ளாமல் மிகவும் குறைவான விலைக்கு விளை பொருட்களை எடுத்துக் கொள்வதாகவும், சாக்கு மாற்றுவதற்கு 20,000 கமிஷன் கேட்பதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றர்.
சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் விவசாயிகள் ஈடுபட்டு வந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் காவல்துறையினர் விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தக்க நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும் என்று கூறியதின் பேரில் கலைந்து சென்றனர்.
விவசாயிகளின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் கடலூர்- விருத்தாச்சலம் நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.