வேளாண் சட்ட மசோதாக்களை எதிர்த்து டெல்லியில் நடைபெற்றுவரும் உழவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக, கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு (AIKCC) விடுத்த அறைகூவலை ஏற்று, விருத்தாசலம் பாலக்கரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, 'மக்கள் அதிகாரம்' நகரக் குழு நிர்வாகி, செ.அசோக்குமார் தலைமை தாங்கினார்.
தமிழக உழவர் முன்னணி, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி, தமிழ்த்தேச மக்கள் முன்னணி, பொதுவுடைமை இயக்கம், தமிழக மக்கள் சனநாயகக் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும் முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், வட்டச் செயலாளர் அசோகன் தலைமையில், விருத்தாசலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உருவப் பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின்போது, விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் உருவப் பொம்மைகளை எரித்துப் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உருவப் பொம்மையில் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
போராட்டம் மற்றும் உருவப் பொம்மைகள் எரிப்பால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.