கஜா புயலின் தாக்கத்தால் கோடிக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்து டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் இழந்து நின்றனர். சில மாதங்கள் ஆனது இயல்பு நிலைக்குத் திரும்ப. பல மாதங்கள் ஆனது விழுந்த தென்னை மரங்களைத் தோப்புகளில் இருந்து வெட்டி அகற்ற. எஞ்சிய தென்னை மரங்களைப் பராமரிப்பதுடன் புதிய தென்னங் கன்றுகளை நட பொருளாதாரம் இல்லாமல் தவித்தனர் விவசாயிகள்.
நெடுவாசல் வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், போர்க் கப்பலில் தென்னங் கன்றுகளைக் கொண்டு வந்து விவசாயிகளுக்கு வழங்குவோம் என்று சொல்லிவிட்டுப் போனதோடு சரி. தமிழ்நாடு அரசு கொடுத்த நிவாரணம் போதவில்லை என்றாலும் வட்டிக்கு கடன் வாங்கி புதிய தென்னங் கன்றுகள் நட்டனர். இந்த நேரத்தில் சில மாதங்கள் தேங்காய், கொப்பரை, தேங்காய் மட்டை, கீற்று, தேங்காய் ஓடுகள் ஓரளவு விற்பனை ஆனதால் விவசாயிகள் சற்று நிம்மதியடைந்தனர். ஆனால் கடந்த சில வருடங்களாகத் தேங்காய் விலை படிப்படியாகக் குறைந்து தென்னை உபபொருட்களும் விலையில்லாமல் போனதால் விவசாயிகளின் நிலை பரிதாபமானது. சில வருடங்களுக்கு முன்பு வரை ரூ. 15 வரை விற்ற தேங்காய் தற்போது ரூ. 7, 8க்கு விற்பனை ஆகிறது.
இந்த நிலையில் தான் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் சாமி. நடராஜன் தலைமையில் பட்டுக்கோட்டை கடை வீதியில் தொடங்கி பேரணியாகச் சென்று, தேங்காய்க்கு உரிய விலை கொடு; உரித்த தேங்காய் கிலோ ரூ. 50க்கு அரசே கொள்முதல் செய்; ரேசன் கடைகளில் சமையல் எண்ணெய்யாக தேங்காய் எண்ணெய்களை வழங்கு; நெல், கரும்பு போல தேங்காய்க்கும் ஊக்கத் தொகை வழங்கு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.