Skip to main content

குருவி சேக்கரமாரி சேர்த்த நெல்லை மாட்டுக்கு விரையம் செய்த அதிகாரிகள்: விவசாயிகள் கண்ணீர் 

Published on 25/04/2018 | Edited on 25/04/2018
Farmers


குருவி சேக்கரமாரி சேர்த்த நெல்லை மாட்டுக்கு இரையாக்கி வருகிறார்கள் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகள் என்று விவசாயிகள் கண்ணீர் மல்க புலம்பி வருகிறார்கள்.

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம், கிள்ளை, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் காவிரி டெல்டாவின் கடை மடை பகுதியாகும். இந்த பகுதிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு மேல் காவிரியில் இருந்து தண்ணீர் வராததாலும், மழை பெய்யாததாலும் விவசாயம் பொய்த்துவிட்டது. இந்த வருடம் சற்று பெய்த மழை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து காவிரி தண்ணீரை விவசாயிகளின் நலன் கருதி தண்ணீர் திறக்கப்பட்டதால் இந்த ஆண்டு சம்பா நெல் பயிர்கள் ஒரளவுக்கு விளைந்து சாகுபடியை எட்டியுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைதொடர்ந்து விளைந்த நெல்லை சாகுபடி செய்து குருவி சேர்ப்பது போல் சேர்த்து சாக்குமூட்டையில் கட்டி அந்த,அந்த பகுதியில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கிடங்கில் விவசாயிகள் விற்பனைக்காக வைத்துள்ளனர். இப்படி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் சரியான பாதுகாப்பு வசதி இல்லாததாலும், வாணிப கழக அதிகாரிகள் சரியான நேரத்தில் கொள்முதல் செய்யாததாலும் தற்காலிக கிடங்கிற்கு வந்துள்ள நெல் மூட்டைகள் ஒவ்வொரு கிடங்கிலும் 500 முதல் 5 ஆயிரம் வரை தேங்கி கிடக்கிறது. தேங்கி கிடக்கும் நெல்மூட்டைகளை மாடுகள் அதன் கொம்புகளால் கிழித்து தின்று வருகிறது. இதனை பார்த்த விவசாயிகள் கனத்த இதயத்துடன் கண்ணீருடன் புலம்பி வருகிறார்கள்.

 

Farmers



 

இதுகுறித்து அந்த பகுதியை சார்ந்த விவசாயி கற்பனைசெல்வம் கூறுகையில் எங்கள் பகுதியில் விளைந்த நெல்களை கொள்முதல் செய்வதற்கு பெரியமதகு, கிள்ளை, தில்லைவிடங்கன்,மேலச்சாவடி உள்ளிட்ட  பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தற்காலிக நெல்கொள்முதல் கிடங்கு அமைத்துள்ளனர். இந்த கிடங்கில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கூடிய ஊழியர்கள் தொடர்ந்து ஐந்து நாட்களாக இல்லாததால் ஒவ்வொரு கிடங்கிலும் பல ஆயிரம் நெல்மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. விவசாயிகள் கொண்டு வந்து சேர்த்துள்ள நெல்மூட்டைகளுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை. இதனை மாடுகள் வந்து தின்றுவிட்டு போகிறது. குறிப்பாக கிள்ளையில் அமைக்கப்பட்டுள்ள கிடங்கில் விவவாயிகள் கற்பனைச்செல்வம், ரஞ்சித்,வினோபா உள்ளிட்டவர்களின் 10 மூட்டை நெல்களை மாடுகள் தின்றுவிட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் இது வரை சரியான நடவடிக்கை இல்லை. பல கிடங்குகளில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் அப்படியே கிடக்கிறது. இதனால் விவசாயிகள் தினம்தோறும் அவதி அடைந்து வருகிறோம். சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனே தலையீட்டு விவசாயிகளின் நலனை காக்கும் வகையில் செயல்படவேண்டும் என்கிறார்.

 

இதுகுறித்து விபரம் அறிய கடலூர் மாவட்ட வாணிப கழக மேலாளர் ராஜேந்திரனை பலமுறை அலுவலக எண்ணிலும், அவரது தொலைபேசியுலும் தொடர்பு கொண்டோம் அவர் போனை எடுக்க மறுத்துவிட்டார். பின்னர் சிதம்பரம் பகுதி வாணிப கழக ஊழியர் ஒருவர் இதுகுறித்து கூறுகையில் தற்காலிக ஊழியர்கள் பணியில் இருந்தார்கள் அவர்களை 45 நாட்களுக்கு பிறகு வேறு இடத்திற்கு மாற்றி விடவேண்டும். அப்படி தான் சில இடங்களில் மாற்றம் செய்துள்ளோம். மாற்றம் செய்தவர்களுக்கு பதில் வேறு ஊழியர்கள் விரைவில் பணியமர்த்தபட்டு நெல்கொள்முதல் செய்யப்படும். இனிமே நெல் மூட்டைகளை மாடு திங்காதவாறு பாதுகாப்பாக வைப்போம் என்கிறார்.   

 

சார்ந்த செய்திகள்