தளி அருகே விவசாயியை கடத்திக் கொலை செய்த நண்பர்கள் மூவருக்கு ஓசூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள குப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடேசப்பா (57). விவசாயி. இவரும், பேரக்கப்பள்ளியைச் சேர்ந்த லட்சுமிநாராயணன் (31) என்பவரும் நண்பர்கள். கடந்த 2017ம் ஆண்டு லட்சுமி நாராயணன், தனது மோட்டார் சைக்கிளில் தேவகானப்பள்ளியில் உள்ள தைலமரத் தோப்புக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு ஏற்கனவே லட்சுமி நாராயணனின் நண்பர்கள் பசவராஜ் (30), சந்தோஷ்குமார் (30) ஆகியோர் காத்திருந்தனர். திடீரென்று நண்பர்கள் மூன்று பேரும் வெங்கடேசப்பாவிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மூவரும் சேர்ந்து வெங்கடேசப்பாவை கத்தியால் குத்திக் கொலை செய்தனர். அவரிடம் இருந்த 8,550 ரூபாயை திருடிக் கொண்டு தப்பிச்சென்றனர்.
இந்த கொலை தொடர்பாக தளி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஓசூரில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் ஜன. 29ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கொலை குற்றவாளிகள் லட்சுமி நாராயணன், பசவராஜ், சந்தோஷ்குமார் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ரோஸ்லின் துரை தீர்ப்பு அளித்தார்.