
கரூர் மாவட்டம், குப்பம் எனும் பகுதி அருகே ப்ளூ மெட்டல்ஸ் மற்றும் கல்குவாரி ஆகியவற்றை செல்வகுமார்(45) என்பவர் நடத்தி வந்தார். இந்நிலையில் கல்குவாரி செயல்படும் காலம் முடிந்தும், தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாகக் கூறி அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெகநாதன் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் கனிமவளத்துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் புகாரின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கனிமவளத்துறை, அந்த கல்குவாரியை நடத்த அனுமதி மறுத்துள்ளது.
இந்நிலையில், சனிக்கிழமை மாலையில் காருடையாபாளையம் அருகே ஜெகநாதன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த கல்குவாரியின் பொலிரோ வேன் ஜெகநாதன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து க.பரமத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டு கொலை வழக்கு பதிவு செய்து கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் மற்றும் கார் ஓட்டுநர் சக்திவேல், ராணிப்பேட்டையைச் சேர்ந்த ரஞ்சித் என மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர், பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சு வார்த்தையில், சமூக ஆர்வலர் முகிலன் கலந்துகொண்டார். அப்போது, மாவட்ட ஆட்சியர் நிதியிலிருந்து குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி, அரசு வேலை வழங்க வேண்டும் என உயிரிழந்த விவசாயி தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், கோரிக்கை நிறைவேற்றினால் மட்டுமே விவசாயியின் உடலை அரசு மருத்துவமனையில் இருந்து எடுத்துச் செல்வோம் என்று தெரிவித்தனர். இன்று ஐந்தாவது நாளாகவும் கரூர் அரசு மருத்துவமனையில் இருக்கும் உடலை எடுத்துச் செல்ல மறுப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், காவல்துறையினர் இன்று சமூக ஆர்வலர் முகிலனை கைது செய்தனர். இதனால், அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.