தனக்கு சொந்தமான ரூபாய் ஐந்து கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் மிரட்டுவதாக விவசாயி ஒருவர் புகார் கூறியிருக்கிறார்.
சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த சண்முகம் கவுண்டர் (வயது 67) என்பவர் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ''எனக்கு சொந்தமான 2.31 ஏக்கர் நிலத்தை 1998ல் வாங்கி இன்று வரை பயன்படுத்தி வருகிறேன். பட்டா, சிட்டா, அடங்கல் உள்பட அனைத்து அரசு ஆவணங்களும் எனது பெயரில் உள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடியின் மனைவியின் தம்பி வெங்கடேஷ் என்பவர் என்னை சந்தித்து, 'உனது நிலத்தை எனது ஒன்றுவிட்ட அண்ணன் மோகன் பெயருக்கு எழுதிக் கொடுத்துவிடு, இல்லையென்றால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவாய்' என்று மிரட்டிவிட்டு சென்றார்.
அதன் பிறகு சங்ககிரி டி.எஸ்.பி. அசோக்குமார் என்னை நேரில் அழைத்து, 'முதலமைச்சர் அதிகாரம் உனக்கு தெரியும். ஆகையால் உடனடியாக எழுதிக்கொடுத்து விடு' என்று மிரட்டிய பிறகு இரண்டு பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளது.
இன்னும் இருபது வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், தொடர்ந்து மிரட்டிக்கொண்டிருக்கிறார். ஒரு வழக்கில் உயர்நீதிமன்றத்தில் கைது செய்ய தடையும், மற்றொரு வழக்கில் விசாரணையே தடை செய்ய தடையானை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று வரை நான் முன்ஜாமீன் பெற்றுள்ளேன்.
என்னையும் எனது சகோதரர் குடும்பத்தையும் பிடித்து சிறையில் அடைக்க எனது மற்றொரு நிலத்தில் சுற்று சுவரை நான்கு பக்கமும் சட்ட விரோதமாக உடைத்து எறிந்திருக்கிறார்கள். தொடர்ந்து எனது தம்பி வீட்டில் வந்து மிரட்டி சென்றார்.
05.02.2019ல் சங்ககிரி டவுன் துணை ஆய்வாளர் ஆண்டனி மைக்கேல் எனது தம்பி வீட்டில் வந்து இரவு 8 மணி வரை இருந்து பெண்கள் உட்பட அனைவரையும் கைது செய்து விடுவேன் என்றும் தொடர்ந்து மிரட்டி விட்டு சென்றனர்''. இவ்வாறு சண்முகம் கவுண்டர் கூறியுள்ளார்.