தமிழக அரசு இயற்கை வழி வேளாண்மையைப் பாதுகாத்து வளர்ப்பதற்கு உயிர்ம வேளாண்மை கொள்கை அறிவித்து செயல்படுத்தக் கோரி வரும் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழர் மரபு வேளாண்மை கூட்டு இயக்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் வெங்கட்ராமன் இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "பசுமைப்புரட்சி என்ற பெயரால் வலியுறுத்தப்பட்ட ரசாயன வேளாண்மை மண்ணை மலடாக்கி, சுற்றுச்சூழலுக்கு கெடுதல் ஏற்படுத்தி, அதிக இடுபொருள் செலவால் உழவர்களும் கடனாளியாக இருக்கிறார்கள். ரசாயனம் போடாத வேளாண் விளைபொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது எனப் புரிந்து கொண்டு, நுகர்வோரும் அதனைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
ஆகவே, தமிழக அரசு இயற்கை வழி வேளாண்மையைப் பாதுகாத்து வளர்ப்பதற்கு உயிர்ம வேளாண்மை கொள்கை அறிவித்து செயல்படுத்தக் கோரி உழவர் அமைப்புகளின் கூட்டு இயக்கமான தமிழர் மரபு வேளாண்மை கூட்டு இயக்கம் சார்பில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் நாளை மறுநாள்( திங்கட்கிழமை) உழவர் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாக ரசாயன வேளாண்மைக்கு வழங்கும் ஏக்கருக்கு 5 ஆயிரம் மானியத்தை மரபு வேளாண்மை உழவர்களுக்கு வழங்கிட வேண்டும். இயற்கை விளைபொருட்களுக்கு சிறப்பு விலை வழங்கி கொள்முதல் செய்ய வேண்டும். அரசு விடுதிகள், மருத்துவமனைகள், சிறைச்சாலை போன்றவற்றில் இயற்கை விளைபொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட இருக்கின்றன” எனத் தெரிவித்தார்.