"தமிழ்நாடு முழுக்க விவசாய பணிசெய்ய ஆட்கள் கிடைப்பது அபூர்வமாகி விட்டது. கூலியாட்கள் இல்லாமல் பல விவசாயிகள் பயிர் நடவு செய்யவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படிப் பயிர் செய்தாலும் அதை முறைப்படி தண்ணீர் பாய்ச்சி வளர்க்கவும் வளர்ந்த பயிர்களை அறுவடை செய்யவும் ஆட்கள் கிடைப்பதில்லை.
தொழிலாளர்கள் பற்றாக்குறையா என்றால் அது தான் இல்லை. எல்லா தொழிலாளர்களும் செல்வது அரசின் நூறு நாள் வேலை திட்டத்திற்குத்தான். அந்த நூறு நாள் திட்ட வேலை என்பது உழைப்பு இல்லாத ஒரு மோசடி திட்டமாக மாறிவிட்டது" எனக் கூறுகிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்புச் செயலாளரும், கள் இயக்க ஒருங்கினைப்பாளருமான செ.நல்லசாமி.
மேலும் அவர் கூறுகையில், "காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் எனப்படும், 100 நாள் வேலை திட்டம் என்பது, பயனாளிகளின் உழைப்பை முடக்கும் திட்டமாகும். இது கிராம மக்களை முன்னிறுத்தி துவங்கப்பட்ட நல்ல திட்டம், ஆனால் இப்போது நடைமுறை படுத்துவோரின் சுய லாபத்துக்காக, அந்தத் திட்டத்தின் நோக்கத்தையே அடியோடு மாற்றிவிட்டனர். வேலை செய்ய வருவோரை, ஆடுகளைப் பட்டியில் அடைப்பது போல, அடைத்து, வேலையைத் தடுத்துவிடுகின்றனர்.
வேலை செய்யாததைக் காரணம் கூறி, ஊதியத்தின் ஒரு பகுதியை, அவர்களே பறித்துக் கொள்கின்றனர். இதில் கொடுமை என்னவென்றால் காரில் வந்து கையெழுத்துப் போட்டு செல்லும் பயனாளிகளும் உள்ளனர். இத்திட்டத்தில் ஊழல் புகுந்து, ஒழுங்கீனம் வளர்ந்துவிட்டது. அரசு சார்பில் கோடி, கோடியாக பணம் ஒதுக்கீடு செய்தும், மக்கள் நேரடியாக பயன்பெறும் எந்தப்பணியும் நடக்காமல் பணத்தைப் பறித்துக் கணக்கு மட்டும் காட்டுகின்றனர்.
இத்திட்டத்தை ஓட்டு வங்கி அரசியலாக, அரசியல் கட்சியினர் மாற்றிவிட்டதால், திட்டத்தின் முறைகேடு பற்றி யாரும் வாய்த்திறப்பதில்லை. விவசாயம், கட்டுமானம் எனப் பல பணிகளில் ஈடுபட்டவர்களை, 100 நாள் வேலை திட்ட பயனாளி என்ற பெயரில் அமர வைத்து, குறைந்த கூலி வழங்குகின்றனர்.
இதனால், விவசாயத்திற்குத் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு, விவசாயப் பணிகள் முற்றிலும் பாதித்துவிட்டன. முறைகேடுகளை முற்றிலும் களைந்து, விவசாயம் போன்ற பணிகளிலும், இவர்களை ஈடுபடுத்தினால் மட்டுமே அரசின் நோக்கம் நிறைவேறுவதுடன், விவசாயம் முடங்காமல் மீண்டும் புத்துயிர் பெறும்." என்றார்.