மலேசியாவிற்கு வேலைக்கு சென்றவர் மரணம்
உடலை கொண்டு வர குடும்பத்தினர் வேண்டுகோள்
கீரமங்கலம், செப், 26.கோத்தமங்கலத்தில் இருந்து மலேசியாவுக்கு பிழைப்புக்காக சென்றவர் அங்கு மர்மமான முறையில் இறந்த தகவல் அறிந்த உறவினர்கள் அவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வதைதுள்ளனர்.
மலேசியா சென்ற விவசாயி :
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன்(40). விவசாயி. இவருக்கு திருமணமாகி ரேவதி(35) என்ற மனைவியும் இந்துமதி(9) சிவபாரதி(8) ஸ்ரீபதி(2) என்ற 3 குழந்தைகள் உள்ளது. மிகவும் ஏழ்மை நிலை காரணமாக, வேலைக்காக கடந்த 2 வருடத்திற்கு முன் வட்டிக்கு கடன் வாங்கி முகவரிடம் கொடுத்து மலேசியாவுக்கு வேலைக்கு சென்றுள்ளார். சம்பளம் குறைவாக இருந்ததால் வாரத்தில் சில நாட்கள் வீட்டில் உள்ளவர்களிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.
உடலை கொண்டு வர கோரிக்கை :
இந்நிலையில், 23 ந் தேதி இரவு மதியழகன் மர்மமான முறையில் இறந்ததுவிட்டதாக அவருடன் வேலை செய்யும் சிலர் மலேசியாவிலிருந்து இவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அறிந்த மதியழகனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் வறுமையில் வாடும் குடும்பத்தை காப்பாற்ற வட்டிக்கு பணம் வாங்கி வெளிநாடு சென்றவர் மர்மமான முறையில் இறந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக உறவினர்கள் கூறினார்கள். மேலும் இறந்த மதியழகன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியரிடமும் அனு கொடுத்துள்ளனர்.
மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தால் விரைவாக மதியழகன் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரலாம்.
-இரா.பகத்சிங்