ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்துள்ள தம்பிரான் வலசு பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி சுசீலா. இவர்களுடைய 29 வயது மகன் பூபதி, ஐடிஐயில் படித்துவிட்டு லேத் பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி காலை, வேலை நிமித்தமாக லேத் பட்டறை உரிமையாளருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்தபடி அரச்சலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சாலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்திற்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பூபதியை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், சம்பவம் தொடர்பாக அறச்சலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த பூபதி மூளைச்சாவு அடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பூபதியின் குடும்பத்தினர், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதை அடுத்து, பூபதியின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தெரிவித்தனர். தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி பெருந்துறை சாலையில் உள்ள அபிராமி மருத்துவமனைக்கு பூபதியைக் கொண்டு வந்துள்ளனர்.
பின்னர் தனித்துவமான மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், உரிய அறுவை சிகிச்சை செய்து, பூபதியின் உடலில் இருந்து கண்கள், இதயம் , இருதய வாழ்வு, கல்லீரல், கணையம், சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளைப் பாதுகாப்பாக எடுத்து, சென்னை, கோவை, கரூர் மற்றும் பெங்களுருக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதனிடைய பூபதியின் உடலுக்கு அபிராமி மருத்துவமனை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டதை அடுத்து, அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசு தரப்பிலும், அவரது குடும்பத்தினர் தரப்பிலும் உரிய மரியாதை செலுத்தப்பட்டது அடுத்து, காங்கேயத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.