Skip to main content

ஓசூரில் வேன் ஓட்டுநர் கத்தியால் குத்திக் கொலை! மனைவியைக் கண்டித்ததால் தம்பி வெறிச்செயல்!

Published on 11/01/2023 | Edited on 11/01/2023

 

family issue one passed away police investigation in Hosur

 

ஓசூரில், மனைவியைக் கண்டித்ததால் அண்ணன் என்றும் பாராமல் கத்தியால் சரமாரியாகக் குத்திக்கொலை செய்த தம்பி உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேகேப்பள்ளியைச் சேர்ந்தவர் அன்னையப்பா. இவருடைய மகன் சென்னப்பா என்கிற சேகர் (37). வேன் ஓட்டுநர். அன்னையப்பாவின் தம்பி கிருஷ்ணப்பா. இவருடைய மகன் முனிராஜ் என்கிற விஜய் (25). அந்த வகையில் சென்னப்பாவும், முனிராஜும் அண்ணன், தம்பி ஆகின்றனர். இவர்கள் இருவரின் வீடுகளும் அருகருகில்தான் இருக்கின்றன. இந்நிலையில், ஜன. 8ம் தேதி இரவு முனிராஜ் மனைவி மதுவுக்கும், சென்னப்பாவின் தந்தைக்கும் இடையே ஏதோ வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் சென்னப்பா, முனிராஜின் மனைவி மதுவைக் கண்டித்துள்ளார்.

 

இந்நிலையில் வீட்டிற்கு வந்த முனிராஜிடம், நடந்த சம்பவத்தைக் கண்ணீருடன் மது கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த முனிராஜ், தான் வீட்டில் இல்லாத நேரத்தில் தன் மனைவியைக் கண்டித்தது தவறு எனக்கூறி, சென்னப்பாவிடம் தகராறு செய்தார். பக்கத்து வீட்டில் வசிக்கும் முனிராஜின் நண்பரான பசவராஜ் மகன் ரேணுகா ஆரத்யா (20) மற்றும் பேகேப்பள்ளியைச் சேர்ந்த சக்தி (22) ஆகியோரும் அவருக்கு ஆதரவாக சென்னப்பாவிடம் தகராற்றில் ஈடுபட்டனர்.

 

இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முனிராஜும் அவருடைய நண்பர்களும் சென்னப்பாவை சரமாரியாகத் தாக்கினர். இந்நிலையில் வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்த முனிராஜ், சென்னப்பாவை சரமாரியாகக் குத்தினார். பலத்த காயம் அடைந்த அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். சென்னப்பாவின் குடும்பத்தினர் அவரை மீட்டு, ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி சென்னப்பா இறந்தார்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் சிப்காட் காவல் ஆய்வாளர் சாவித்திரி மற்றும் காவலர்கள் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முனிராஜ் மீது காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்தனர். இந்தக் கொலை தொடர்பாக முனிராஜ், அவருடைய கூட்டாளி ரேணுகா ஆரத்யா ஆகிய இருவரையும் கைது செய்தனர். மற்றொருவரைத் தேடி வருகின்றனர்.

 

இது ஒருபுறம் இருக்க, உடற்கூராய்வு முடிந்த பிறகு சென்னப்பாவின் உடல் அவருடைய வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. வீட்டில் உட்கார்ந்திருந்த அவருடைய தந்தை அன்னையப்பாவை அஞ்சலி செலுத்த அழைத்தனர். அப்போது அவர் சரிந்து கீழே விழுந்தார். அவர் அமர்ந்திருந்த நிலையிலேயே மாரடைப்பில் இறந்துவிட்டது தெரிய வந்தது. மகன் கொலையுண்ட அதிர்ச்சியில் தந்தையும் மாரடைப்பில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்