Skip to main content

போலீசார் பொய் வழக்கு; இறந்தவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டாம்..!

Published on 27/08/2017 | Edited on 27/08/2017
போலீசார் பொய் வழக்கு; இறந்தவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டாம்..!

சேலம் மாவட்டம், ஓமலூர் பேரூராட்சி 10–வது வார்டு, வ.உ.சி.நகர் பகுதியை சேர்ந்தவர் இராஜேந்திரன் என்ற பழனிசாமி (வயது-45). இவர் ஓமலூரில் உள்ள மாயாபஜார் என்ற ஒரு ஓட்டல் ஒன்றில் காய்கறி வாங்கி கொடுக்கும் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.

கடந்த 22.8.17-காலை, பழனிசாமியும், அவருடன் உணவகத்தில் வேலை செய்யும் இன்னொரு பெண் தொழிலாளருடன் ஓமலூர் உழவர் சந்தைக்கு காய்கறி வாங்கிவர சென்றுள்ளார்.

காலை 7.00-அளவில் காய்கறி வாங்கிக்கொண்டு தனது ஹீரோ ஹோண்ட மோட்டார் சைக்கிளில் பழனிசாமி மாயாபஜார் உணவகத்துக்கு வந்துகொண்டிருந்த நேரத்தில், அங்காளம்மன் கோவிலின் கிழக்கில் போலீஸ் குடியிருப்பில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்த உதவி பயிற்சி ஆய்வாளர் பட்டு என்பவரின் ஸ்கூட்டியும், பழனிசாமி வந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், உதவி ஆய்வாளர் பட்டுவுக்கு வலது நெற்றியிலும், வலது கால் முட்டியிலும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில். பழனிசாமியில் பின் மண்டையில் அடிபட்டு மயக்க நிலைக்கு சென்ற அவர் முதலில் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கோமா நிலையிலேயே 25-ஆம் தேதி காலை 10.00-மணிக்கு பழனிசாமி உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, பழனிசாமி ஓட்டிக்கொண்டு வந்த மோட்டார் சைக்கிள், உதவி ஆய்வாளர் பட்டு வந்த ஸ்கூட்டியின் பின் பகுதியில் மோதியதால்தான் விபத்து ஏற்பட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆனால், உயிரிழந்த பழனிசாமியின் உறவினர்கள் தரப்பில், போலீசார் பொய் வழக்கு பதிந்துள்ளதாகவும், விபத்துக்கு காரணமே பெண்–சப் இன்ஸ்பெக்டர்தான். எனவே, நியாயம் கிடைக்கும் வரை பழனிசாமி உடலை வாங்க மாட்டோம் என கூறி நேற்று முன்தினம் சேலத்தில் மறியல் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து சேலம் உதவி ஆட்சியர் குமரேஸ்வரன், ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து பழனிசாமியின் உடலை வாங்காமலே உறவினர்கள் திரும்பினர்.

இந்த நிலையில், நேற்று 2–வது நாளான நேற்று சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள உடற்கூறு ஆய்வகத்தின் முன்பு உறவினர்கள் திரண்டனர். அங்கு பழனிசாமியின் உடலை ஆய்வு செய்ய அவர்கள் சம்மதிக்கவில்லை. மாறாக, நாங்கள் கொடுக்கும் புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் பட்டுவின் மீது போலீசார் புதிதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆனால், போலீஸ் தரப்பில், முழுமையான விசாரணைக்கு பின்னரே எந்த மேல்நடவடிக்கையும் எடுக்கமுடியும். எனவே, புதிதாக வழக்குப்பதிவு செய்யும் எண்ணம் இல்லை என்றனர். அதைத்தொடர்ந்து 2–வது நாளாகவும் பழனிசாமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் நேற்று மாலை வீடு திரும்பினர்.

சேலம் நியூரோ பவுண்டேசன் மருத்துவமனையில் ஒரு நாள் உல் நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்ற பயிற்சி உதவி ஆய்வாளர் பட்டு தற்போது விடுப்பு எடுத்துக்கொண்டு, சொந்த ஊரானா கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் கிராமத்துக்கு சென்று விட்டதாக தெரிகிறது.

- பெ.சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்