இன்ஸ்டாகிராமில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலிக்கணக்கு தொடங்கியது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் திருச்சி கலெக்டர் என்ற பெயரில் கணக்கு தொடங்கி அதை நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி அதன் மூலம் அவரது நட்பு வட்டாரம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பணம் கேட்கப்படுவதாகத் தெரியவந்தது.
இது தொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் உள்ளவர்கள் ஆட்சியரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தனது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட முயற்சி நடப்பதாகவும், அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த போலி கணக்கு முடக்கப்பட்டது. மேலும், இது போன்ற மோசடியில் ஈடுபட முயற்சித்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இது போன்ற போலி கணக்குகளை நம்பி ஏமாற வேண்டாம் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.