மது அருந்திவிட்டு ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகிறார்கள். மாணவிகளிடம் தவறாக நடக்கிறார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகள் கிளம்பிய வண்ணம் உள்ளன. அதே நேரத்தில், ஒழுங்கின்மை காரணமாக மாணவர்களைக் கண்டிக்கும் ஆசிரியர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதும் நடக்கின்றன. அதனால்,ஆசிரியர் பாதுகாப்புச் சட்டம் வேண்டுமென்று ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதன் காரணமாக, ஆசிரியர் - மாணவர் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்திருக்கிறது பள்ளிக்கல்வித்துறை.
கடந்த வாரம், விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காளிராஜ் குறித்த செய்தி நக்கீரன் இணையத்தில் வெளிவந்தது. 'அவர் மீது ஜாதி கண்ணோட்டத்துடன், போலி கையெழுத்துக்கள் போட்டு, திட்டமிட்டு பொய்ப் புகார் தயாரித்தனர். காளிராஜ் மிகவும் நல்லவர். பள்ளியின் வளர்ச்சியில் அக்கறையோடு செயல்படுபவர்..' என்று மாணவர்களின் பெற்றோர் சிலர் தொடர்ந்து தங்களின் கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர். சின்னக்காமன்பட்டி பள்ளி விவகாரம் இப்படி இருக்கும்போது, அதே விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டத்தில் இருந்து தொடக்கப்பள்ளி ஆசிரியை ஒருவர் மீதான பாலியல் புகார், பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அந்த ஊர் பொதுமக்கள் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
'அந்த ஆசிரியை விவகாரத்தை கடவுளே படம்பிடித்துக்காட்டி எங்களின் ஊருக்கும் கல்வித் துறைக்கும் நல்லது செய்திருக்கிறார். ஆதாரங்கள் உள்ளன.' என்று அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்திருக்கும் ஊர்ப் பெயரையும் பாலியல் புகாருக்கு ஆளானவர்களின் பெயர்களையும் தவிர்த்திருக்கிறோம். கிராமம் என்பதால் ஆசிரியர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிப்பார்கள் என்று தெரிந்தும் அந்த மாதிரியான தவறு அங்கே நடந்திருக்கிறது.
வகுப்பறையிலேயே தகாத செயல் நடக்கிறது என்றும் பள்ளியில் விடுப்பு எடுக்காமலே, வழக்கறிஞர் ஒருவருடன் அந்த ஆசிரியை திருச்செந்தூர் சென்று இரண்டு நாட்கள் விடுதியில் தங்கினார் என்றும், அங்கிருந்து திரும்பும் வழியில் விபத்து நடந்து இருவரும் சிகிச்சை பெற்றனர் என்றும் இந்த ஒழுங்கற்ற செயலுக்கு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரும் உடந்தை என்றும் சிகிச்சைக்கு பின் அந்த ஆசிரியை மீண்டும் இதே பள்ளிக்கு வந்தால் வழக்கறிஞரின் மனைவி விளக்குமாற்றால் அடிப்பார் என்றும், நடந்த அக்கிரமத்தை விலாவாரியாக விவரிக்கிறது அந்தப் புகார்.
மேலும், 'கல்வித் துறை அதிகாரிகளே! உங்கள் காலில் விழுகிறோம். எங்கள் ஊர் மானத்தைக் காப்பாற்றுங்கள்..' என்று ஊர் பொதுமக்களும் மகளிர் அமைப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அந்த ஆசிரியை அப்படி நடந்து கொண்டது உண்மையா? அல்லது பொய்ப் புகாரா? என்பதை தமிழக பள்ளிக்கல்வித்துறைதான் விசாரித்தறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.