வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள், போலி பாஸ்போர்ட் மூலம் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகச் சென்னை ஏர்போர்ட் அத்தாரிட்டி அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பாஸ் பண்ணப்பட்டது.
அதன் பேரில் இந்த மாதம் 4ம் தேதி மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த பயணிகளிடம் இமிக்ரேசன் அதிகாரிகள் தீவிரமாகச் சோதனை நடத்தினர். அப்போது, ராமநாதபுரம், பரமக்குடி அருகே உள்ள அக்ரமிசியைச் சேர்ந்த பாலுச்சாமியின் மகன் முருகன் என்பவரின் பாஸ்போர்ட்டை பரிசோதித்தனர். பரிசோதித்துக் கொண்டே பல கேள்விகளை அவரிடம் அதிகாரிகள் கேட்டனர். அதற்கு முன்னுக்குப்பின் முரணாகப் பதில் சொன்னார் முருகன்.
இதனால் அவர் மீது சந்தேகம் கொண்ட இமிக்ரேசன் அதிகாரிகள், தீவிரமாகப் புலனாய்வு செய்ததில், அவரது உண்மையான பெயர் ஜெகன் என்பதையும், ராமநாதபுரம் பெரியபட்டிணத்தைச் சேர்ந்த நாகசாமி என்பவரின் மகன் என்பதையும் கண்டறிந்து அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவர் வைத்துள்ள பாஸ்போர்ட் போலி என்பதையும் கண்டறிந்ததோடு, சில குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்கிற தகவல்களும் ஏர்போர்ட் அத்தாரிட்டி அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து முறையாகப் புகார் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார் ஜெகன்.
இதில் கொடுமை என்னவெனில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் வி.ஐ.பி.க்களுடன் நெருக்கத்தை வைத்துக் கொண்டு அக்கட்சிகளின் தலைவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி அக்கட்சியைச் சேர்ந்தவர் எனக் காட்டிக் கொள்பவராம் ஜெகன். அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோரிடம் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்ததாக ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.