வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து சாலை ஒப்பந்ததாரர் வீட்டில் 200 சவரன் நகையை மர்ம ஆசாமிகள் சிலர் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். சாலை ஒப்பந்ததாரரான இவரது வீட்டிற்கு இன்று காலை ஏழு பேர் வந்துள்ளனர். தங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அவர்கள், பாலமுருகன் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். சோதனையின் முடிவில் அவரது வீட்டில் இருந்த 200 சவரன் நகைகள், ரூ. 2லட்சத்திற்கான ரொக்கம் மற்றும் சொத்து பத்திரங்களை பறிமுதல் செய்தவதாகக் கூறி எடுத்துச் சென்றுள்ளனர். திடீரென நடைபெற்ற இந்த சோதனையால் அதிர்ச்சியடைந்த பாலமுருகனுக்கு பறிமுதல் செய்யப்பட்டதற்கான எந்த ரசீதும் வழங்கப்படவில்லை என்பது பின்னர்தான் நினைவுக்கு வந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக சுதாரித்த பாலமுருகன், செவ்வாய்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
பாலமுருகன் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 'தானா சேர்ந்த கூட்டம்' பட பாணியில் வந்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளைத் தேடி வருகின்றனர்.