நெல்லையில் கிளினிக் நடத்திய போலி டாக்டர் பிடிபட்டார்
நெல்லை பேட்டை ரகுமான் பேட்டை பகுதியில் அர் ரஹ்மான் சித்தா அகஸ்தியர் - இயற்கை மூலிகை மருத்துவமனை என்ற பெயரில் கிளினிக் செயல்பட்டு வந்தது. அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தவர் போலி டாக்டர் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட கிளினிக்கிற்கு நேற்று சுகாதாரத்துறையினர் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் அங்கு சிகிச்சை அளித்து வந்த நபர் சந்திரபோஸ் என்பதும், அவர் தனது பெயரை சேக் முகமது என மாற்றி முஸ்லிம் தொப்பி அணிந்து அலோபதி சிகிச்சை அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் சந்திரபோசிடம் சித்த மருத்துவம் படித்ததற்கான முறையான ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து சுகாதார அதிகாரிகள் மருத்துவமனையில் இருந்த இயற்கை மூலிகை மருந்துகளை கைப்பற்றி சந்திரபோசை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் போலி டாக்டரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.