வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்வதெல்லாம் இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. அப்படித்தான் விருதுநகரைச் சேர்ந்த மாரிராஜ் என்பவர் தன்னை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் உதவியாளர் எனச் சொல்லி, அமைச்சரைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி, பண மோசடி செய்திருக்கிறார். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், மாரிராஜைப் பிடித்து, சென்னை - அபிராமபுரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கின்றனர். தப்பி ஓடிய இன்னொரு மோசடி நபரான பெரியசாமியைப் போலீசார் தேடி வருகின்றனர்.
அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பிலோ மாரிராஜ், பெரியசாமி போன்றோர் யாரென்றே தங்களுக்கு தெரியாது எனச் சொல்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில், தங்களை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் உதவியாளர் என்று சொல்லிக்கொண்டு திரிபவர்கள் குறைந்தது 100 பேராவது இருப்பார்கள் என்றும், விருதுநகர் ஆய்வு மாளிகைக்கு வரும் அமைச்சருக்கு சாப்பாடு வாங்கித்தரும் காளிராஜ் என்பவர், அமைச்சர் பெயரைச் சொல்லி பணமோசடியில் ஈடுபட்டு, சில தினங்களுக்குமுன் பிடிபட்டார் என்றும் கூறுகிறார்கள் ஆளும்கட்சி வட்டாரத்தில்.