Skip to main content

உதவியை எதிர்நோக்கும் மாற்றுத் திறனாளி

Published on 27/09/2017 | Edited on 27/09/2017
உதவியை எதிர்நோக்கும் மாற்றுத் திறனாளி



தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த நாடாகாடு பகுதியை சேர்ந்தவர் இராமையன். இவரது மகன் ராமு (வயது 37). போலியோ நோய் தாக்குதல் காரணமாக சிறு வயது முதலே இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு, மூன்று சக்கர சைக்கிளை பயன்படுத்தியே நடமாடி வருகிறார்.

இவருடைய பெற்றோர் பல காலத்திற்கு முன்பே இறந்து விட்டனர். சகோதரர் ஒருவர் இருந்த போதும், அவரும் நோய் வாய்ப்பட்ட நிலையில் வறுமையில் வாடும் நிலையில் தனித்து விடப்பட்ட நிலையில், கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டு, தருவதை உண்டு வாழ்க்கையை நடத்தி வருகிறார் மாற்றுத்திறனாளி ராமு. உடலில் தான் ஊனம் என்றாலும், மனதில் வைராக்கியத்தோடு, தன்னால் முடிந்த வேலைகளை செய்வதில் தயக்கம் காட்டுவதில்லை.

இப்பகுதி தென்னை சூழ்ந்த பகுதியாக இருப்பதால், கீற்று முடைதல், பக்கத்து நகரமான பேராவூரணி காய்கறிக் கடைகளில் காய்களை தரம் பிரித்து சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளின் மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயில் ஜீவனத்தை நடத்தி வருகிறார். அதுவும் காய்ச்சல், தலைவலி என அடிக்கடி படுத்தும் நோக்காடால் விழுந்து கிடக்கும் போது, அக்கம்பக்கத்தினர் ஏதும் கொடுத்தால் சாப்பிடுவார். இல்லையென்றால் பெரும்பாலும் பட்டினி தான் என்கின்றனர் இப்பகுதியினர்.

அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் அருண்பாண்டியன் வழங்கிய மூன்று சக்கர சைக்கிளும் பழுதடைந்து விட்டதால், புதிய மூன்று சக்கர வாகனம் கிடைத்தால் உதவியாக இருக்கும் என்கிறார் ராமு. அரசு நிர்வாகத்தை அணுகவோ, நிதியுதவி கேட்டுப் பெறவேண்டும் என்ற விபரமோ அறிந்திருக்கவில்லை மாற்றுத்திறனாளியான ராமு. மாவட்ட நிர்வாகமோ, கருணை உள்ளம் கொண்ட  தனி நபர்களோ இவருக்கு உதவலாம் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.... 

இவருக்கு உதவ விரும்புவோர் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரான மதிவாணனை தொடர்பு கொள்ளலாம். செல்-9965793734

-இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்