75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டுத் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பட்டர்பிளை இணைந்து பேரணி, கண் மற்றும் ரத்ததான குழு ஆரம்பித்தல் நிகழ்வை நடத்தியது. இதில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பேரணியைப் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம். செல்வம் தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் செய்யக்கூடிய அறுவை சிகிச்சைகளுக்குச் சுமார் 200 யூனிட்டுக்கு மேல் இரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் போதுமான அளவு இரத்தம் கிடைப்பதில்லை. நிறையத் தன்னார்வ நிறுவனங்கள் உதவி செய்ய முற்பட்டாலும் அதைச் சரிவர நிவர்த்திச் செய்ய முடிவதில்லை. எனவே இதை மனதில் கொண்டு இரத்தம் கேட்பவருக்கும், கொடுப்பவருக்கும் இலகுவான முறைப்படி சேவை செய்ய ரோட்டரி ஆர்.பி.டி எனும் குழுமம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இதில் கல்லூரிகளில் உள்ள ரோட்ராக்டர்ஸ், என்.எஸ். எஸ். மாணவர்கள் மற்றும் இரத்த தானம் செய்ய விரும்பும் ரோட்டரி உறுப்பினர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இக்குழுவில் மக்களுக்குத் தேவையான அனைத்து வகை ரத்தம் உடையவர்களும் இருக்கிறார்கள். இதை ரோட்டரி மாவட்ட துணை பயிற்சியாளர் எஸ்.ஆர். செந்தில், மாவட்ட செயலாளர் மணி குழுவினை தொடங்கி வைத்தனர். இதில் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசனும் கலந்து கொண்டார். மேலும் மாநில நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி எம். செந்தில்குமார், மாவட்ட மனித மேம்பாட்டுத் துறை லெட்சுமி பிரபா,மோகன் மற்றும் எழில் சிறப்புரையாற்றினர். இவ்விழாவில் ஜோசப் கண் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பிரதிபா வரவேற்று பேசினார். ரோட்டரி கிளப் ஆப் பட்டர்பிளை தலைவர் சுபத்ர நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியை ஜோசப் கண் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி சுபா பிரபு ஏற்பாடு செய்திருந்தார்.