வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் ஏரிகள், நீர்நிலைகள், அணைகள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில், பல்வேறு அணைகளிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணையின் முழு கொள்ளளவான 90 அடியில் நீர்மட்டம் 87.77 அடியை எட்டியதால் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்கப்படுவதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னையில் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியில் நீர் திறப்பு 2,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,000 கனஅடியில் இருந்து 2,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து 10,000 கனஅடியில் இருந்து 14,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 10,858 கனஅடியிலிருந்து 10,904 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 112.28 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 81.69 டி.எம்.சி.யாக உள்ளது.