வளி மண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்பகுதியின் இலங்கையில் மையம் கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தென்மாவட்டக் கடலோரப் பகுதிகளில் 11-ம் தேதி முதல்14-ம் தேதி வரை கனமழையும், பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின் படி தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் 11-ம் தேதி முதல் இரவு பகல் தொடர் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக கடலோர நகரமான தூத்துக்குடியில் மிதமாக தொடங்கிய மழை 11, 12 ஆகிய தேதிகளில் கனமழையாக மாறியது நகரின் தாழ்வான பகுதிகள் வௌளக்காடாக மாறின. நெல்லையிலும் 12-ம் தேதியன்று தொடர் மழை. மக்களின் இயல்பு வாழ்க்கை இதனால் பாதிக்கப்பட்டாலும் பொங்கல் புத்தாண்டு என்பதால் மழையில் நனைந்தவாரே நெல்லை, பாளை மார்க்கெட் பகுதிகளில் தேவையான சரக்குகளை வாங்க மக்கள் வெளியே வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகைக்குத் தேவையான மஞ்சள் குலைகள் கரும்புகள் அதிக அளவில் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்தாலும் தொடர் மழை காரணமாக எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை என்கிறார்கள் சந்தை வியாபாரிகள்.
அதே சமயம் இரண்டு நாள் தொடர் மழை காரணமாக பாபநாசம் அணை நிரம்பி வழிகிறது. கன மழையால் 156 அடிகொண்ட சேர்வலாறு அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
118 அடி திறன் கொண்ட மணிமுத்தாறு அணை 2016-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது 5 வருடங்கள் கழிந்து 118 அடி கொள்ளளவு நிரம்பியதால் வினாடிக்கு 3 ஆயிரத்து 149 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
தென்மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள இந்த மூன்று பெரிய அணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேர தென்காசி மாவட்டத்தின் 84 மற்றும் 85 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி, கடனா நதிகள் நிரம்பி வெள்ளப் பெருக்கெடுக்க, இந்த ஐந்து அணைகளின் உபரி நீரும் மொத்தமாக வெளியேறி முக்கூடல் பகுதியில் சங்கமித்து புரளுவதால் தாமிரபரணியின் வெள்ளப் பெருக்கெடுத்து வருகிறது மொத்தமாக 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது அணைகளைப் பார்வையிட்ட நெல்லை கலெக்டர் விஷ்ணு அணைகளின் நிலவரங்களைக் கண்காணிக்க பொறியாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
வருடம் தோறும் இதுபோன்று 20 முதல் 30 டி.எம்.சி. தாமிரபரணி நீர், ஸ்ரீவைகுண்டம் வழியாகப் பாய்ந்து கடலில் கலப்பது தொடர் சம்பவமாகியிருக்கிறது. வீணாகக் கடலில் கலக்கும் நீரை வறட்சிப் பகுதிகளுக்கு விவசாயம் பொருட்டு திருப்பினால் விவசாயம் செழித்து குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என்று மாதம்தோறும் நடக்கிற விவசாயிகள் கூட்டத்தில் முன்னாள் நீர்ப்பாசனக்கமிட்டி தலைவர் ஆழ்வார்குறிச்சி செல்லையா தொடர்ந்து கோரிக்கை வைத்தும் செயல்பாடில்லை என்கிறார்.
தொடர் மழை காரணமாக குற்றால மெயினருவி உட்பட பிற அருவிகளிலும் வெள்ளப் பெருக்கெடுப்பு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள்ள் குளிப்பதற்கும் மற்றும் விடுமுறை தினமான காணும் பொங்கல் தினம் வரை சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக நக்கீரன் இணையதளத்திற்குத் தெரிவித்தார் தென்காசி மாவட்டக் கலெக்டரான டாக்டர் சமீரன்.
வடகிழக்குப் பருவ மழை குறைந்த நேரத்தில் வளிமண்டல மேலடுக்கின் சுழற்சி காரணமாக வரமாகக் கிடைத்த இந்த தொடர் மழையை அரசு முறையாகப் பயன்படுத்துகிற வழியில்தானிருக்கிறது மக்கள் நலன்.