சேலம் அருகே, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதுடன், கல்லால் தாக்கி கட்டடத் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சேலத்தை அடுத்த ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (40). கட்டடத் தொழிலாளி. கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி இரவு, ஆட்டையாம்பட்டி சுடுகாட்டில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து ஆட்டையாம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக, எஸ்.பாப்பாரப்பட்டி மேட்டுக்கடையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜமாணிக்கம் மகன் கோவிந்தராஜ் (27) என்பவரை கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட சேகர், சம்பவத்தன்று ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையத்தில் படுத்திருந்தார். அப்போது அவரை அருகில் உள்ள சுடுகாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்ற கோவிந்தராஜ், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். மேலும், சேகரிடம் இருந்த 300 ரூபாயையும் பறித்துக்கொண்டார். அப்போது ஏற்பட்ட தகராறில், சேகரை கல்லால் தாக்கி கோவிந்தராஜ் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இந்த வழக்கின் விசாரணை, சேலம் 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசுத்தரப்பில் வழக்கறிஞர் தமிழரசன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோ, கொலை செய்த குற்றத்திற்காக கோவிந்தராஜூக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, வெள்ளிக்கிழமை (டிச. 13) தீர்ப்பு அளித்தார். மேலும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி பணம் பறித்த குற்றத்திற்காகவும் ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.