சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே உள்ள புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபா (38 - பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் வெங்கடேசன். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தீபாவின் கணவர் வெங்கடேசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், தீபா தனது 2 குழந்தைகளுடன் புதுப்பாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார்.
மேலும், அவர் புதுப்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகே வாடகை கட்டடத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இவரது கடைக்கு அருகே மின் சாதன பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தவர் பாலாஜி (26). இந்த நிலையில், தீபாவுக்கும் பாலாஜிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த வெங்கடேசன், தனது மனைவி மற்றும் பாலாஜியை கண்டித்துள்ளார். இதையடுத்து, பாலாஜியின் தந்தை குமாரும், இவர்களைக் கண்டித்துள்ளார். இருப்பினும், இவர்களுக்குள் அந்த உறவு நீடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி தீபாவின் கடையில் திடீரென்று தீ பிடித்தது. இந்த விபத்தில், பலத்த காயங்களுடன் தீபா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கேளம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். அந்த விசாரணையில், பாலாஜியின் தந்தை குமார் பெட்ரோல் ஊற்றி தீபாவை கொலை செய்தது காவல்துறையினருக்குத் தெரியவந்தது. அதன் அடிப்படையில், காவல்துறையினர் குமாரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், பாலாஜி நேற்று தனது கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் பாலாஜியின் கடைக்குள் புகுந்து தாங்கள் வைத்திருந்த அரிவாளை வைத்து அவரைச் சரமாரியாக வெட்டினர். இதில், பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர், அந்த மர்ம கும்பல் தாங்கள் வந்த காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தை அறிந்த கேளம்பாக்கம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலாஜியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட தீபாவின் சகோதரர் ரவி(42) இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு பதுங்கியிருந்த ரவியையும் அவரது கூட்டாளிகளையும் காவல்துறையினர் பிடித்தனர். அதன் பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது, தீபாவின் கொலைக்கு பழி வாங்குவதற்காக தான் ரவி தன்னுடைய கூட்டாளிகளை வைத்து பாலாஜியை கொலை செய்துள்ளார் என்று காவல்துறையினருக்குத் தெரியவந்தது. அதன் பின்னர், இது குறித்து தீபாவின் சகோதரர் ரவி, அவரது கூட்டாளிகள் சரவணன் (22), ஆனந்த் (24), அரவிந்த் (24), திருமாவளவன் (25) மற்றும் ஸ்டீபன் ராஜ் (22) ஆகிய 6 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.