Skip to main content

நூதன முறையில் ரூ. 90 லட்சம் பறிப்பு; 6 பேரை அதிரடியாகக் கைது செய்த காவல்துறைக்கு குவியும் பாராட்டு!

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

Extortion of Rs. 90 lakhs in a sophisticated manner; Accumulating praise for the police who arrested 6 people!Extortion of Rs. 90 lakhs in a sophisticated manner; Accumulating praise for the police who arrested 6 people!
மாதிரி படம் 

 

கரூர் மாவட்டம், ஆண்டாள் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரின் நண்பர் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாஜகான். சக்திவேல், ஷாஜகானிடம், "என்னிடம் 2,000 ரூபாய் நோட்டுகள் ஒரு கோடி ரூபாய்க்கு உள்ளது. அதனை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்தால் 10 லட்சம் ரூபாய் கமிஷன் தருகிறேன்" என்று கூறியுள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து ஷாஜகான் தனது நண்பர்களான கரூரைச் சேர்ந்த குணசேகரன், பரமத்தி வேலூரைச் சேர்ந்த ராஜசேகர், திருப்பூரைச் சேர்ந்த தங்கராஜ் ஆகியோருடன் சேர்ந்து கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ்குமார் என்பவரை அணுகியுள்ளார். சுரேஷ்குமாரிடம் 500 ரூபாய் நோட்டுகளாக 90 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால், 2,000 ரூபாய் நோட்டுகளாக ஒரு கோடி ரூபாய் கிடைக்கும். கமிஷன் தொகை 10 லட்சத்தை நாம் பிரித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.

 

அதற்கு சுரேஷ்குமார் ஒத்துக் கொண்டதால் பணத்தை மாற்றித் தருவதாக சக்திவேலிடம் கூறியுள்ளனர். அதற்கு சக்திவேல் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் எரியோடு அருகே உள்ள கொண்டமநாயக்கனூரில் உள்ள தன்னுடைய தோட்டத்திற்கு வாருங்கள் என்றும், அங்கு வைத்து பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

 

இதனை அடுத்து கடந்த ஜூன் 26 ஆம் தேதி சுரேஷ்குமாரை அழைத்துக் கொண்டு 90 லட்சம் ரூபாய் பணத்துடன் அனைவரும் சக்திவேலின் தோட்டத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு தனது கூட்டாளிகளுடன் இருந்த சக்திவேல் கத்தி மற்றும் அரிவாளைக் காட்டி மிரட்டி, 90 லட்சத்தைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

 

இது குறித்து சுரேஷ்குமார் எரியோடு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் 2,000 ரூபாய் மாற்றுவதில் தரகராகச் செயல்பட்ட ஷாஜகான், குணசேகரன், ராஜசேகர் மற்றும் தங்கராஜ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து சக்திவேலின் இரண்டாவது மனைவி சத்தியபிரியாவையும் கைது செய்தனர்.

 

மேலும், பணத்தைப் பறித்துச் சென்ற சக்திவேல் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சக்திவேல் பெங்களூரில் பதுங்கி இருந்தது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி தலைமையிலான தனிப்படை போலீசார் சக்திவேலை சுற்றி வளைத்துப் பிடித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து, ரூபாய் 46 லட்சம் பணம் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் காவல்துறை துரிதமாகச் செயல்பட்டதாக உயர் அதிகாரிகளும், அப்பகுதி மக்களும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்