Skip to main content

கோவில் கடைகளை காலி செய்வதற்கான கால அவகாசம் ஜனவரி -31 வரை நீடிப்பு

Published on 01/11/2018 | Edited on 01/11/2018
la

 

தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து கோவில் கடைகளையும் காலி செய்வதற்கான கால அவகாசம் 31-ஜனவரி 2019 வரை நீடித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிப்ரவரி 2-ம் தேதி மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 19 கடைகள் எரிந்து சாம்பலானது.

 

இந்த தீ விபத்தை அடுத்து தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவெடுத்து தமிழகத்தில் இந்துசமய அறநிலைய துறைக்கு உட்பட்ட அனைத்து கோயில்களிலும் உள்ள கடைகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தனர்.

 

இந்துசமய அறநிலைய துறை ஆணையர் அந்தந்த கோவில் அதிகாரிகளுக்கு கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றுமாறு சுற்றறிக்கை அனுப்பினர். சுற்றறிக்கை உத்தரவை எதிர்த்தும், மாற்று இடம் வழங்கக்கோரியம் கடை உரிமையாளர்கள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். தமிழக கோயில்களின் பழமையை பாதுகாக்கும் வகையில் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை 2018 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அகற்றுமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.


மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், சங்கரன்கோவில் உள்ளிட்ட கோவில்களை சேர்ந்த கடை வியாபாரிகள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
அதில் உரிய காலஅவகாசம் வழங்காமல் மற்றும் மாற்று இடம் வழங்காமல் கடைகளை காலி செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு மேல்முறையீட்டு மனுக்களில் கூறியிருந்தனர்.

 

இந்த மனுக்கள் இன்று நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணன், கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பாரதிதாசன் தமிழகம் முழவதிலும் உள்ள கோவில் கடைகளை காலி செய்ய வேண்டும் என கூறியது சரி எனவும்,  தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து கோவில் கடைகளையும் காலி செய்வதற்கான கால அவகாசத்தை 31-ஜனவரி 2019 வரை நீடிப்பதாகவும்,
கடைகளை காலி செய்ய  வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய கோரிய அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

 

சார்ந்த செய்திகள்