நாமக்கல் அருகே 3 லட்சம் ரூபாய் கடனுக்கு ஈடாக 2 கோடி ரூபாய் சொத்துகளை போலி ஆவணங்கள் மூலம் தன் பெயருக்கு கிரயம் செய்து கொண்டதாக கந்துவட்டி ஆசாமி குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் போதுப்பட்டியைச் சேர்ந்தவர் கோபிநாத் (40). இவர் கோழித்தீவனம் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை விற்பனை செய்து வருகிறார். சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு கோபிநாத், சின்ன முதலைப்பட்டிச் சேர்ந்த துரைசாமி என்பவரிடம் 3 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். மாதந்தோறும் கடனுக்கான வட்டியும், அசல் தொகையின் ஒரு பகுதியையும் தவணை முறையில் செலுத்தி விடுவதாக கூறியுள்ளார்.
இதற்கிடையே, இன்னும் 2 லட்சம் ரூபாய் பாக்கி இருந்த நிலையில், கடன் கொடுத்த துரைசாமியோ, உடனடியாக பாக்கித்தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் மாதந்தோறும் வட்டி மட்டுமே 2 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என மிரட்டியுள்ளார். அதாவது டபுளிங் வட்டி செலுத்த வேண்டும் என்று மிரட்டியிருக்கிறார்.
இதுமட்டுமின்றி, கோபிநாத்துக்குச் சொந்தமான சொத்து பத்திரங்கள், நிரப்பப்படாத வங்கி காசோலைகள் உள்ளிட்ட ஆவணங்களையும் துரைசாமி எடுத்துக் கொண்டார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கோபிநாத் ஒரு கட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் ஆனதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கோபிநாத் துரைசாமிக்குச் சேர வேண்டிய தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்தி விட்டதாகவும், தன்னிடம் இருந்து எடுத்துச்சென்று சொத்து ஆவணங்களை திருப்பித் தரும்படியும் கேட்டுள்ளார். அப்போதுதான் கோபிநாத்துக்குச் சொந்தமான 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அவருக்கே தெரியாமல் துரைசாமி போலி ஆவணம் தயாரித்து தன் பெயருக்கு கிரயம் செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து, கோபிநாத் நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், துரைசாமி தன்னிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாகவும், 3 லட்சம் ரூபாய் கடனுக்கு ஈடாக 2 கோடி ரூபாய் சொத்துகளை அபகரித்துக் கொண்டதாகவும், அவரிடம் இருந்து தன் சொத்துகளை மீட்டுக் கொடுக்கும்படியும் கூறியிருந்தார். எஸ்.பி. உத்தரவின்பேரில் நல்லிபாளையம் காவல் ஆய்வாளர் குமரவேல்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.