கலைஞரின் மூத்த பிள்ளையாக திகழும் முரசொலி பத்திரிக்கையின் ஆசிரியராக தன் வாழ்நாளை அர்ப்பணித்த முரசொலி செல்வமும் கடந்த 10 ஆம் தேதி இயற்கை எய்தினார். நான் சாய்வதற்கு இன்னொரு தோலாக இருந்து வந்தவர் என் சகோதரியின் கணவர் முரசொலி செல்வம் அவரை இழந்து நிற்கிறேன் என்று நெஞ்சுருகும் அறிக்கையை வெளியிட்டு தன் துயரத்தை வெளிப்படுத்தினார். இந்த அறிவிப்பு தமிழகத்தின் அனைத்து தொண்டர்கள் மத்தியிலும் கண்கலங்க வைத்தது.
அவரது இறப்பை அனுசரிக்கும் பொருட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழக முழுவதும் மூன்று நாட்கள் எந்த கட்சி நிகழ்ச்சிக்கும் அனுமதி கிடையாது, திமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க வேண்டும் என்று தலைமைக் கழகம் அறிவித்திருந்தது. அந்த உத்தரவைக் காற்றில் பறக்க விட்டு விட்டு ஆயுதபூஜை நிகழ்வினை திமுக சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் கொண்டாடியதாகக் குற்றம்சாட்டுகின்றனர் திமுகவினர்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுக ஒன்றிய செயலாளர், மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம் தலைமையில், சேர்மன் கலந்துகொள்ள ஆயுதபூஜை விழாவைக் கோலாகலமாக நடத்தி பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கியுள்ளனர். இது அப்பகுதி திமுக நிர்வாகிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கலைஞரின் மனசாட்சி அரசியல் மாமேதை என புகழப்பட்ட முரசொலி மாறன் இறந்த போது போயஸ் கார்டனில் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா வீட்டில் பட்டாசு வெடிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது போல் உள்ளது. அந்த அரசு அலுவலகத்தில் மட்டும்மல்ல அதே வளாகத்திலுள்ள கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டியின் தொகுதி சட்டமன்ற அலுவலகத்திலும் இந்த ஆயுதபூஜை கொண்டாடி உள்ளார்கள் என்றார்கள்.
ஆனால், “நாங்கள் செல்வம் அவர்களின் இறப்புக்கு நிகழ்ச்சியில் சென்னையில் இருந்தோம். இந்த பூஜை கொண்டாட்டம் துணைச் சபாநாயகருக்கு தெரியாமலே சட்டமன்ற அலுவலகத்தில் கொண்டாடப்பட்டுள்ளது” என்கிறார்கள் அவரது தரப்பினர்.