அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் 62 லட்சம் இழந்த முன்னாள் ராணுவ வீரர். சைபர் கிரைம் போலீசார் விசாரணை.
புதுச்சேரி முருங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 56). முன்னாள் ராணுவ வீரரான இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சமூக வலைத்தளங்கள் மூலமாக சம்பாதிக்க ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா எனது செல்போனில் தேடி உள்ளார். அப்போது இன்ஸ்டாகிராமில் ஒரு போலி நிறுவனத்திலிருந்து ஒரு லிங்க் அழைப்பு வந்துள்ளது. இதில் 'முதலீடு செய்யும் பணத்திற்கு 20% அன்றைய தினமே உங்களுக்கு வருமானம் கிடைக்கும், மேலும் முதல் முறை முதலீடு செய்யும் பணத்திற்கு ஈடாக நாங்களும் நீங்கள் எவ்வளவு பணம் முதலீடு செய்கிறீர்களோ அதே அளவு பணம் போனசாக தருவோம். எங்களிடம் பிளாட்டினம் ப்ரீமியம் ஸ்பெஷல் போன்ற பல்வேறு முதலீட்டு பிரிவுகள் உள்ளது' என்றும் கூறியுள்ளனர்.
இதனை நம்பிய முருகன் கடந்த ஜனவரி மாதம் ரூபாய் 10,500 முதலீடு செய்துள்ளார். அவர்களும் அதற்கு ஈடாக 10,500 பணத்தைப் போட்டு அன்றைய தினமே 30 வீடியோக்களை அனுப்பி உள்ளனர். அதைப் பார்த்து ரிவ்யூ (கருத்து) சொல்ல வேண்டும் என்றும் அப்படி செய்தால் பணம் அனுப்பப்படும் என்றும் கூறியுள்ளனர். முருகனும் ரிவ்யூ சொல்ல அதன் பின் ரூ.22,000 வரை அவரது வங்கி கணக்கில் பணம் அனுப்பி உள்ளனர். அதனால் இதை முழுமையாக நம்பி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ரூபாய் 32 லட்சம் அவர்கள் கூறிய பல்வேறு வங்கி கணக்குகளில் பணத்தை முதலீடு செய்துள்ளார். இந்த பரிமாற்றங்களின் மூலம் அவருடைய செல்போனில் அவர் சம்பாதித்த லாபத்தையும் சேர்த்து அவரது கணக்கில் ரூபாய் 58 லட்சம் பணம் இருப்பு இருப்பதாக அந்த செயலியில் காட்டியுள்ளது.
அந்த பணத்தை அவர் எடுக்க முயன்றபோது உங்களுக்கு எர்ரர் காட்டுகிறது என்றும், இதற்கு நீங்கள் வரி கட்டினால் தான் மேற்கண்ட பணத்தை எடுக்க முடியும் என்று சொல்லவே அதற்கு வரி கட்டுவதற்காக அவர்கள் கூறிய பல்வேறு வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் அவரது வங்கி கணக்கில் ரூபாய் 1 கோடியே 15 லட்சம் இருப்பதாகக் காட்டியுள்ளது. அந்த பணத்தை எடுக்க மேலும் வரி செலுத்த வேண்டும் என்று கூறியதால் தன்னிடம் இருந்த அனைத்து பணம், நகை, கடன் தொகை என அனைத்தையும் முதலீடு செய்துள்ளார். மொத்தம் ரூபாய் 62 லட்சம் பணத்தை அனுப்பி உள்ளார். ஆனாலும் அவரால் அவரது கணக்கில் இருக்கின்ற பணத்தை எடுக்க முடியவில்லை. அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முருகன் புதுச்சேரி இணையவழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.