புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டுள்ளவர்.
ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்த நிலையில் நடந்த ஜல்லிக்கட்டுகளில் அவரது 'கொம்பன் காளை' வாடிவாசல்களில் ‘நின்று’ விளையாடி பெயர் வாங்கியது. இந்த மகிழ்ச்சி சில ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலேயே அதிகமான வாடிவாசல்களைக் கொண்ட தென்னலூர் ஜல்லிக்கட்டில் 'கொம்பன் காளை' பங்கேற்றது. “வாடியிலிலிருந்து கொம்பன் வரப்போகுது” என்று வர்ணனையாளரின் அறிவிப்பைத் தொடர்ந்து ஆக்ரோசமாக சீறிப்பாய்ந்து வெளியே வந்த கொம்பன் வந்த வேகத்தில் தடுப்புத் தூணில் மோதியதில் அடிபட்டு இறந்தது. இந்த இழப்பு அவரது குடும்பத்திற்கான பேரிழப்பாக கருதப்பட்டது. கொம்பன் காளையை தனது தோட்டத்திலேயே அடக்கம் செய்து நாள்தோறும் பார்த்து வருகின்றனர்.
அதன் பிறகு தான் வளர்க்கும் காளைகளுக்கு மறைந்த கொம்பன் பெயரையே வைத்து வெள்ளை கொம்பன், சின்ன கொம்பன், கருப்பு கொம்பன் என பல காளைகளை தோட்டத்தில் வளர்த்து வந்தார். வெளியில் சென்று வந்தால் நேராக காளைகளை பார்த்த பிறகே வீட்டிற்குள் செல்வது மன நிம்மதி தரும் என்று கூறிவந்தார். காளைகளை பராமரிக்கவும் வாடிகளுக்கு கேரவேன்களில் ஏற்றிச் செல்லவும் பலர் அவரிடம் வேலையில் உள்ளனர்.
இந்த நிலையில் தான் இன்று புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிப்பட்டி பிடாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டில் 800 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இதில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டிருந்த நேரத்தில், அவரது 'கருப்புக் கொம்பன் காளை' வாடிவாசலில் இருந்து வரப்போகுது முடிஞ்சா புடிச்சுப்பாரு என்று வர்ணனையாளர் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் வீரர்கள் தயாராக, காளையுடன் வந்தவர்கள் துண்டுகளை வீசி வரவேற்க காத்திருந்த நேரத்தில் ரோஜா பூ மாலையுடன் வாடியிலிருந்து அதிவேகமாக சீறிப்பாய்ந்து வருவதைப் பார்த்த வீரர்கள் ஒதுங்கும் நேரத்தில் வந்த வேகத்தில் 'பழைய கொம்பன்' போல வாடிவாசல் தடுப்புக் கட்டையில் மோதி சரிந்தது.
கருப்புக் கொம்பன் அசைவற்று மயங்கிக் கிடந்த கருப்புக் கொம்பனை மீட்டு அவசர அவசரமாக ஒரத்தநாடு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர். கருப்புக் கொம்பன் அடிபட்டதால் மனமுடைந்து காணப்பட்டார் மாஜி. கடந்த மாதம் திருவப்பூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற கருப்புக் கொம்பன் காணாமல் போய் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.