சில நேரங்களில் சில மனிதர்கள் மிகமிக நல்லவர்களாக இருப்பதைப் பார்க்கும்போது வியக்காமல் இருக்க முடியவில்லை. தான் கண்டெடுத்த ரூ.50000-ஐ திருப்பிக் கொடுத்த ஈரோடு சிறுவன் முகமது யாசினின் நேர்மை கண்டு “யாசின் எதிர்காலத்தில் என்ன படிக்க வேண்டுமென ஆசைப்பட்டாலும், அவனை என் பிள்ளை போல் நினைத்து நான் படிக்க வைப்பேன்.” என்று ரஜினியைச் சொல்ல வைத்தது.
சிவகாசியிலும் சிவசங்கரி என்பவர், தவறுதலாக தன் கைக்கு வந்த ரூ.8.5 லட்சத்தை திருப்பிக்கொடுத்து, நேர்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.
அது என்ன எட்டரை லட்ச ரூபாய்? எப்படி வந்தது சிவசங்கரியிடம்?
சிவகாசி – சாட்சியாபுரத்தைச் சேர்ந்த சிவசங்கரி டெய்லரிங் தொழில் பார்த்துவருகிறார். இங்குள்ள வாசன் ஜவுளிக்கடைக்கு துணி வாங்கச் சென்றபோது, துணிப்பைக்குப் பதிலாக, கரன்ஸிக் கட்டுக்கள் இருந்த பையைத் தவறுதலாகக் கொடுத்துவிட்டனர். வீட்டுக்கு வந்த பிறகுதான், பை மாறியதைக் கண்டார் சிவசங்கரி. இவ்வளவு பணம் கையில் இருக்கிறதே? உடனடியாக திருப்பிக் கொடுக்க வேண்டுமே? என்று பதைபதைத்தார்.
அண்ணனை துணைக்கு அழைத்துக்கொண்டு ஜவுளிக்கடைக்கு கிளம்பினார். அதற்குள், பணப்பை காணாமல் போனது குறித்து, சிவகாசி டவுண் காவல் நிலையத்தில், வாசன் ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜ்குமார் தகவல் தெரிவிக்க, உடனடியாக வந்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய ஆரம்பித்தார்கள் காக்கிகள். அந்த நேரத்தில், சிவசங்கரியும் அந்த ஜவுளிக்கடைக்கு வந்துவிட்டார். “முதலாளி.. உங்க பணம் இந்தா இருக்கு..” என்று திருப்பிக் கொடுத்தார். எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இந்தக் காலத்திலும், இத்தனை நேர்மையான மனிதர்கள் இருக்கிறார்களா? என்று கிள்ளிப் பார்த்துக்கொண்டனர். விசாரணை நடத்த வந்த போலீசார், பணத்தை திருப்பிக் கொடுத்த விபரத்தை சிவசங்கரியிடம் எழுதி வாங்கிக்கொண்டது.
எல்லோரும் நல்லவராக இருந்துவிட்டால்! நினைத்தாலே இனிக்கிறதே!
பராசக்தி திரைப்படத்தில், கவிஞர் கு.மு. அண்ணல் தங்கோ எழுதிய பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.
எல்லோரும் வாழ வேண்டும்! உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும்! நல்லோர்கள் எண்ணமிது!