சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி 471 நாட்கள் சிறைக்கு பிறகு நேற்று உச்சநீதிமன்றம் கொடுத்த நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது பற்றி பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ''ஊழல் செய்துவிட்டு சிறையில் இருந்து வெளியில் வந்தால் அவர்கள் தியாகிகளாக மாறிவிடுகிறார்கள். இன்று காலையில் அவர் கூட செல்ஃபி எடுக்கிறார்களாம். எங்கே போய் சொல்வது இதையெல்லாம். ஜாமீன் தான் கிடைத்துள்ளது விடுதலை ஆனதைப் போல கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் பொய் வழக்கில் இருந்து விடுதலை ஆவேன் என்று சொல்கிறார்.
அவர் சொல்வதை போல் பார்த்தால் பொய் வழக்கு போட்டது யார்? அப்பொழுது வழக்கை போட்டது தமிழக முதலமைச்சர் என்று சொல்கிறாரா?. தான் போட்ட வழக்கில்தான் செந்தில் பாலாஜி சிறை சென்றார் என்பதை அறிந்த முதல்வரே, செந்தில்பாலாஜியை தியாகியை போல் முன்னிறுத்துவது மிக வேடிக்கையான ஒன்று'' என்றார்.