இன்று சென்னை யானைக்கவுனியில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது பேசிய அமைச்சர் சேகர்பாபு, ''நடந்து கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சி. முற்றிலும் சமூகநீதிக்கு குரல் கொடுக்கின்ற ஆட்சி. உச்சநீதிமன்றத்தில் சமூகநீதி மறுக்கப்படுவதால், அதையே எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கு அனைத்துச் சட்டமன்றக் கட்சிகளின் கூட்டத்தையும் கூட்டுகின்ற ஆட்சி.'' என்றார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, ''புயல் வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். எந்த இடத்திலெல்லாம் பழைய மரங்கள் இருக்கிறதோ அதையெல்லாம் கண்டறியச் சொல்லியுள்ளோம். கனமழை மற்றும் மிதமான மழை பொழிந்து வரும் நிலையில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தல்படி கடந்த 5 ஆம் தேதி 200 வார்டுகளில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இன்று துறைமுகம் தொகுதியில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்துள்ளார். இன்று மட்டும் சென்னை மாநகராட்சியில் நான்கு பகுதிகளில் மருத்துவ முகாம் நடைபெற இருக்கிறது. காய்ச்சல், சேற்றுப்புண், பல் மற்றும் கண் பிரச்சனைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் மருந்துகள் இந்த முகாம்களில் கிடைக்கும்.'' என்றார்.